ஷாக்.. ஜஸ்ட் 20 விநாடிகளில் 60 முறை கத்திக்குத்து.. பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி கொலை
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தார்வார் அருகே தனியார் ஓட்டலில் வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி என்பவர் 20 செகண்டில் 60 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காலில் விழுந்து ஒருவர் ஆசீர்வாதம் வாங்கிய நிலையில் இன்னொருவர் கத்தியால் குத்திய பதைபதைக்க வைக்கும் சம்பவம் கேமராவில் பதிவாகி உள்ளது.
கர்நாடகத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் குருஜி. இவர் வாஸ்து சாஸ்திர நிபுணராக இருந்தார். தற்போது மும்பையில் செட்டில் ஆன நிலையில் அவ்வப்போது கர்நாடகத்துக்கு வந்து சென்றார். பல்வேறு தொலைக்காட்சிகளில் தோன்றி வாஸ்து சாஸ்திரங்களை வழங்கி வந்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி-தார்வார் ரோட்டில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு கடந்த 3ம் தேதி முதல் 220ம் எண் கொண்ட அறையில் அவர் தங்கினார்.

கத்தியால் குத்திக்கொலை
இந்நிலையில் உப்பள்ளி ஓட்டலில் அவர் தங்கிய நிலையில் அவரை பார்க்க இன்று 2 பேர் வந்திருந்தனர். இருவரும் மதியம் 12 மணியளவில் ஓட்டல் வரவேற்பரையில் காத்திருந்தனர். இவர்களை சந்திக்க சந்திரசேகர் குருஜி வந்தார். அப்போது அவர்கள் கத்தியால் சரமாரியாக சந்திரசேகர் குருஜியை குத்திவிட்டு அங்கிருந்து ஓடினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீஸ் கமிஷனர் லாபுராம், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை போலீஸ் கமிஷனர் கோபால் பாய்கோட், வடக்கு பிரிவு உதவி கமிஷனர் வினோத் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஓட்டலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சந்திரசேகர் குருஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கேமராவில் காட்சிகள் வெளியானது
இதற்கிடையே கொலை செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. அதில் சந்திரசேகர் குருஜியை பார்க்க 2 பேர் ஓட்டலில் காத்திருக்கின்றனர். சந்திரசேகர் குருஜி வந்தவுடன் ஒருவர் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிலையில் இன்னொருவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்துகிறார். இதை அவர் தடுக்க முயற்சிக்கவே 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தினர்.

20 செகண்டில் 60 முறை கத்திக்குத்து
இதை ஓட்டலில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண் ஒருவர் அலறியடித்து அங்கிருந்து ஓடவே சில ஊழியர்கள் தடுக்க முயன்றனர். அப்போது கத்தி வைத்திருந்த நபர்கள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து சந்திரசேகர் குருஜியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சென்றனர். இருவரும் சேர்ந்து வெறும் 20 செகண்டில் 60 முறை கத்தியால் குத்தி சந்திர சேகர் குருஜியை கொன்றது தெரியவந்தது.

2 பேர் கைது - விசாரணை
இதற்கிடையே கொலையாளிகள் 2 பேரும் பெலகாவி மாவட்டத்துக்கு காரில் சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரித்த போலீசார் ராமதுர்காவில் 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மகாந்தேஷ் சிரூரு மற்றும் மஞ்சுநாத் முரேவாட் என்பது தெரியவந்தது. இதில் மகாந்தேஷ் சிரூரு மற்றும் அவரது மனைவி வனஜாக்சி ஆகியோர் சந்திரசேகர் குருஜியின் வாஸ்து நிலையத்தில் பணியாற்றியது தெரியவந்தது. இருப்பினும் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக கைதான 2 பேர் மற்றும் வனஜாக்சியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications