இனி திருமண விழாவில் பெண் வீட்டாருக்கு உணவு கிடையாது.. தடைபோட்ட கிராமம்! ‘சம்மந்தி சாப்பாடு' பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் திருமண செலவை குறைக்க 'பீகரு ஊட்டா' எனப்படும் 'சம்மந்தி சாப்பாடு' போடக்கூடாது என கிராமத்தில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 'சம்மந்தி சாப்பாடு' என்பது என்ன? அதனை ரத்து செய்தது ஏன்? என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இப்போது திருமணங்கள் ஆடம்பரம் செய்யப்படுகின்றன. மணமகள், மணமகன் யாராக இருந்தாலும் கூட செலவுகள் அதிகரிக்கிறது. பணம் படைத்தவர்களுக்கு இது பெரிய விஷயம் கிடையாது.
ஆனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களும் திருமணத்தை ஆடம்பரமாக செய்து கடனில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இதனை தடுக்கும் வகையில் தான் கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். அது என்னவென்றால் திருமணத்தில் வழங்கப்படும் 'பீகாரா ஊட்டா' விருந்து இனி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் 'பீகரு' என்றால் சம்பந்தி உள்ளிட்ட திருமண வழி உறவுகளை குறிக்கும். 'ஊட்டா' என்றால் உணவை குறிக்கும்.
இந்த 'பீகரு ஊட்டா' தான் தற்போது'பீகாரா ஊட்டா' என சொல்லப்படுகிறது. இந்த வழக்கம் கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டங்களில் மிகவும் பிரபலம். அங்குள்ள சொரப், சாகர், ஷிகாரிப்புரா, சனஹரா, தீர்த்தஹள்ளி உள்ளிட்ட தாலுகாக்களில் பிரமாண்டமாக நடக்கும். கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கும் இந்த விருந்து பரவி இருந்தாலும் சிவமொக்கா மாவட்டத்தின் 'பீகாரா ஊட்டா' மிகவும் பிரபலம்.
சிவமொக்கா மாவட்டத்தில்இந்த விருந்தை மணமகன் வீட்டார் தான் வழங்குவார்கள். திருமணம் முடிந்த பிறகு மணமகள் வீட்டாரை வரவேற்கும் வகையில் இந்த விருந்து வழங்கப்படும். இதில் மட்டன், சிக்கன், மீன் உணவுகள் பரிமாறப்படும். இதற்கு அதிகப்படியான செலவு ஏற்படும்.
இந்த செலவை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவமொக்கா மாவட்டம் ஷிகாரிப்புரா தாலுகாவில் உள்ள ஹராகி கிராமத்தில் இனி 'பீகாரா ஊட்டா' பரிமாறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருந்துக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
திருமணத்தில் வரும் ஆடம்பரமான அசைவ விருந்தை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல குடும்பங்களின் திருமண செலவுகள் குறையும் என்கின்றனர் அந்த கிராம மக்கள். ஒருவேளை யாராவது இந்த முடிவையும் மீறி 'பீகாரா ஊட்டா' பரிமாறினால் அவர்கள் மீது கிராம கமிட்டி சார்பில் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கிராம கமிட்டியினர் கூறுகையில், ''இந்த முடிவால் நாங்கள் திருமண மரபுகளுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று நினைக்க வேண்டாம். ஏழை, நடுத்தர குடும்பங்களின் திருமண செலவை குறைப்பதை மையப்படுத்தி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் அனைவரும் செய்கிறார்கள் என்று பலரும் கடன் வாங்கி தங்களின் தகுதிக்கு மீறி இத்தகைய விருந்தை வழங்குகிறார். இதனை தடுப்பது அவசியம். அதேபோல் எளிமையான திருமணத்தை முன்னெடுப்பது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த முடிவு என்பத திருமண விழாக்களில் செலவின் அடிப்படையில் பெருமைபேசும் குடும்பங்களுக்கிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நிச்சயம் தவிர்க்கும். இது கிராமம் முழுவதும் பொதுவான விதிமுறை என்பதால் எந்தவொரு குடும்பமும் மற்றவர்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகாது. எளிமையான முறையில் திருமணத்தை நடத்தினாலும் அது கிராமத்தின் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது என்று எளிதாக சொல்லி விட முடியும்'' என்றனர்.


Click it and Unblock the Notifications
