"அப்பாவின் ஆத்மா சாந்தியடையாதா?" இண்டிகோ விமான ரத்தால் தந்தையின் அஸ்தியை மார்போடு அணைத்து கதறிய பெண்
பெங்களூர்: பெங்களூரில் இருந்து ஹரித்வார் ஆற்றில் தந்தையின் அஸ்தியை கரைக்க புறப்பட்ட நிலையில் இண்டிகோ விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தந்தையின் ஆத்மா சாந்தி அடையாதோ என கலங்கி அவரது மகள் அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது.

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட 'செயல்பாட்டுக் குறைபாடு' காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். பயணிகளின் தனிப்பட்ட, மருத்துவ, மத ரீதியான முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் கடந்த வியாழக்கிழமை 52 விமானங்கள் வருவதும், 50 விமானங்கள் புறப்படுவதும் ரத்து செய்யப்பட்டன.
6ஆவது நாளாகத் தொடரும் இண்டிகோ விமானச் சேவைகள் பாதிப்பால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயணிகளில் ஒருவரான நமிதா, பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவித்தார். நீண்ட நேரம் இண்டிகோ விமான ஊழியர்களிடம் போய் போய் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அவரது கைகளில் அஸ்திக் கலசத்துடன் இருந்த அவர் "அவசரமாக" ஹரித்வாருக்குச் செல்ல உதவுமாறு கெஞ்சினார்.
பெங்களூரில் அஸ்தியுடன் தவிக்கும் மகள்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் என் அப்பாவின் அஸ்தியை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன். இன்று (டிச.4) பெங்களூருவிலிருந்து டெல்லி வழியாக டேராடூனுக்குப் செல்ல இருந்தேன். அங்கிருந்து டிச.5ஆம் தேதி என் தந்தையின் அஸ்தியை ஹரித்வாரில் கரைக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
60 ஆயிரம் கட்டணம்
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களிடம் போய் கேட்டால் வேறு ஏதாவது ஒரு விமானத்தை புக் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் இண்டிகோ விமானங்கள் ரத்தால் மற்ற விமானங்களின் கட்டணம் அதிகரித்துவிட்டன. தற்போது பெங்களூரில் இருந்து ஹரித்வார் செல்ல ஒருவருக்கு ரூ 60 ஆயிரம் கேட்கிறார்கள். 5 பேருடன் குடும்பமாகச் செல்லும் நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலவிட முடியும்?
தந்தை அஸ்தி
என் தந்தையின் அஸ்தியை அவசரமாகக் கரைக்க வேண்டியுள்ளதால், ஹரித்வார் செல்ல அரசு ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என நமிதா வேண்டுகோள் விடுத்தார். மேலும் என் தந்தையின் அஸ்தியை கரைக்கவே முடியாதா என நமிதா கேட்டு, அந்த அஸ்தியை மார்போடு வைத்து அழுதது அனைவர் மனதையும் கரைய செய்தது.
முன்பதிவு
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. "டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை முன்பதிவுகளை ரத்து செய்யவோ, மறுதிட்டமிடவோ செய்தால் முழு பணம் திருப்பி அளிக்கப்படும்" என இண்டிகோ அறிவித்தது. பயணிகளின் வசதிக்காக நகரங்களில் ஹோட்டல் அறைகள், சாலை வழி போக்குவரத்து, விமான நிலையங்களில் உணவு, சிற்றுண்டிகள், வயதானவர்களுக்கு ஓய்வறை வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்படுவதாகவும் நிறுவனம் விளக்கமளித்தது.
விமான ரத்து
விமான ரத்துகள் பலரின் வாவது ழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. புவனேஸ்வர் - பெங்களூரு பயணிக்க முடியாததால், ஒரு புதுமணத் தம்பதியினர் தங்கள் வரவேற்பு விழாவை வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடத்தியுள்ளனர். டிசம்பர் 2 ஆம் தேதி புவனேஸ்வரிலிருந்து பெங்களூரு வழியாக ஹுப்பள்ளிக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த அவர்கள், தொடர் தாமதங்கள் காரணமாக டிசம்பர் 3-ஆம் தேதி அன்று விமானம் ரத்து செய்யப்பட்டதால், பெங்களூருவில் சிக்கித் தவித்தனர். இன்று 6-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications