தமிழில் இருந்தே கன்னடம்.. கமல்ஹாசனுக்கு எதிராக கிளம்பிய கன்னடிகாஸ்! பெங்களூருவில் கிழிந்த பேனர்கள்!
பெங்களூர்: மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் சிம்பு நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என கமலஹாசன் பேசியது கன்னட அமைப்பினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கிழித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம், பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு கமலஹாசன் உடன் இணையப் போகிறார் என்ற தகவல் தமிழ் திரையுலகில் பேசுபொருளானது. நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி படம் பண்ண போகிறது என்ற தகவலே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து சிம்புவும் இந்த படத்தில் இணைகிறார் என்று அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாக உற்சாகமடைய செய்தது. கமலஹாசன், சிம்பு மட்டுமல்லாது, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூஜார்ஜ் ஆகியோரின் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

தக் லைஃப்:
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் படத்தில் கைகோர்க்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சமீபத்தில் வெளியான டீசர், டிரைலரும் ரசிகர்களை ஆர்வத்தோடு எதிர்நோக்க வைத்துள்ளது. படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
கன்னடம் சர்ச்சை:
சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பறந்து ப்ரமோஷன் செய்து வருகிறது பட குழு. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவரை குறிப்பிட்டு பேசிய நடிகர் கமலஹாசன்," ராஜ்குமார் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம்.
சிவராஜ்குமார்:
அதன் காரணமாகவே இங்கு வந்திருக்கிறார். அதனால் தான் என் பேச்சை தொடங்கும் போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்" என பேசினார். கமலஹாசனின் பேச்சை ஆமோதிப்பது போல சிவராஜ்குமார் தலையசைத்தார்.
கடும் கண்டனம்:
இந்த நிலையில் கன்னடம் மொழி பேசும் மக்களின் உணர்வுகளை கமலஹாசன் புண்படுத்தி விட்டதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் கமலஹாசனுக்கு எதிராக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது.
போஸ்டர்கள் கிழிப்பு:
மேலும் கமலஹாசனின் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. இதற்கிடையே கமலஹாசனின் தக் லைஃப் படத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் குறிப்பாக பெங்களூரில் தக் லைஃப் படத்தின் பேனர்களை கிழித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கமலஹாசன் படம் வெளியாகும் போது ஏதாவது ஒரு பிரச்சனை வருவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை கர்நாடகாவில் இருந்து கமலஹாசனுக்கு சிக்கல் முளைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications