சுட்டு கொல்ல யார் அதிகாரம் கொடுத்தது? கர்நாடகாவில் தமிழர்களை கொன்ற வனத்துறை? நொடிக்கு நொடி பதற்றம்
பெங்களூர்: மான் வேட்டையில் ஈடுபட்டதாக சொல்லி 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை சுட்டு கொன்றது பூதாகரமாக வெடித்துள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே இந்தச் சமபவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவின் தமிழிசை, தவறு செய்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாடியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதிக்குள் சென்ற வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது
சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தின் ஹோலேமுராடி வனப்பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சிலர் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே வனத்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மரியமங்களா கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், சுமார் 20 கிலோ விலங்கு இறைச்சி அடங்கிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்துள்ளார்.
போராட்டம்
3 தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தகவல் கிடைத்தவுடன் அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், கிராம மக்களும் ஷக்யா கிராமத்தில் அமைந்துள்ள வனத்துறை அலுவலகம் மற்றும் ஊழியர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டனர். அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே தனது கணவரை வனத்துறை அதிகாரிகள் சுட்டு கொன்றுள்ளதாக உயிரிழந்த ஜெகநாதன் டோடியா பீட்டரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தவறே செய்தாலும் கைது செய்து விசாரிப்பதற்கு பதிலாக எப்படி சுட்டு கொல்லலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உயிரிழந்தோர் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இழப்பீடு
அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே 3 பேரின் உடல்களையும் பெற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தினர் சம்மதித்தனர்.
தமிழிசை
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் தவறு செய்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "கர்நாடகாவில் நடந்த சம்பவம் வருத்தத்திற்குரியது மட்டுமல்ல. கண்டனத்திற்குரியது. இங்கு நமது நாட்டில் யாருக்குமே சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் இல்லை. அரசியலமைப்பை நாம் பின்பற்ற வேண்டும். அவர்கள் மீது சந்தேகம் இருந்திருந்தால் கைது செய்து விசாரணை நடத்தியிருக்கலாம். போலீசாரை வைத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். எப்படி சுட்டு கொல்ல முடியும்?
இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகா பாஜகவை கேட்பீர்களா என தமிழக பாஜகவினரை பார்த்து கேட்கிறார். கர்நாடகாவில் பாஜக எதிர்க்கட்சியாக தான் இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருக்கிறது. இங்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதை எப்படி பொறுத்து கொள்ள முடியும். கர்நாடகா அரசு இதற்கான பதிலை சொல்லியே தீர வேண்டும். உரிய இழப்பீட்டையும் தர வேண்டும். இந்தச் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சட்டம் கடமையை செய்யும்
அவர்கள் தவறே செய்திருந்தாலும் போலீஸ் வைத்து விசாரணை நடத்தியிருக்கலாம். சட்டம் தனது கடமையை செய்திருக்கிறோம். சுட்டு கொல்ல யாருக்குமே அதிகாரம் கிடையாது. இங்கு கொடூர குற்றத்திற்கும் தூக்க தண்டனையே தர கூடாது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது வனத்துறையினர் எப்படி துப்பாக்கி சூடு நடத்தலாம்.. இது சட்டத்திற்கு புறம்பானது" என்றார்.


Click it and Unblock the Notifications
