"மற்ற மதங்களை விட இஸ்லாம் தான் உயர்ந்தது.." கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை.. பாய்ந்து வந்த பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்த இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், மற்றொரு அமைச்சரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி, இஸ்லாம் மற்ற மதங்களை விட உயர்ந்தது என்று கூறியுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இப்போது டிகே சிவக்குமார் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு கடந்த சில காலமாகவே தொடர்ந்து சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வருகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

இஸ்லாம் மதம் உயர்ந்தது
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குக்னூர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராயரெட்டி, இஸ்லாம் ஒரு சிறந்த மற்றும் மிகவும் மனிதநேயமான மதம் என்று கூறினார். இஸ்லாம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது என்றும் மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்றுத்தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாம் குறித்து எதுவும் தெரியாதவர்கள் அதை பற்றி தவறான கருத்துகளையும் உருவாக்கி பரப்பி வருகிறார்கள். இஸ்லாம் அனைத்து மதங்களையும் விட உயர்ந்தது என்று நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் அது மனிதநேயத்துடன் தொடங்குகிறது. மேலும், குரான் குறித்து நான் விரிவாக படித்ததில்லை. ஆபிரகாமிய மதங்கள் குறித்து அதிகம் ஆய்வு செய்யவில்லை. ஆனாலும், மதங்கள் மற்றும் வெவ்வேறு வரலாறுகளை நான் படித்துள்ளேன். அதை வைத்தே நான் இதை சொல்கிறேன்" என்றார்.
கண்டனம்
அவரது இந்த கருத்துக்கு அங்குள்ள பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அமைச்சரின் இந்த கருத்துக்கு கர்நாடக பாஜக தலைவர் ஆர். அசோக் கடும் கண்டனம் தெரிவித்தார். ராயரெட்டியின் பேச்சு இந்து மதத்தையும் சனாதன தர்மத்தையும் அவமதிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக முதல்வர் டிகே சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பிய அசோக், "உங்கள் காங்கிரஸ் அரசின் இந்து விரோத மனநிலைக்கு முடிவே இல்லையா?
டி.கே. சிவக்குமார் அடிக்கடி கோயில்களுக்கு செல்கிறார். கேமராக்களுக்கு முன்பாக கோயில்களில் பக்தியை வெளிப்படுத்தும் சிவக்குமார், தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் இந்து மதம் மற்றும் கோயில்கள் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கும்போது ஏன் அமைதியாக இருக்கிறார். ராயரெட்டி தனது கருத்துகளை திரும்ப பெற்று கர்நாடகாவில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி சிவக்குமார் தான் இந்து விரோதி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்துக்கள் நம்பிக்கை
அமைச்சராக இருந்து கொண்டு தான் கோயில்கள் மற்றும் மடங்களுக்கு செல்வதில்லை என்று கூறியது லட்சக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது. அதை விட இஸ்லாம் மற்ற மதங்களை விட உயர்ந்தது என்ற அவரது கருத்து சனாதன தர்மத்தை அவமதிப்பதாக இருக்கிறது" என்று கடுமையாக சாடினார்.
மேலும், பாஜக செய்தி தொடர்பாளர் அசோக் கவுடாவும் ராயரெட்டியை விமர்சித்தார். தனது வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்காக அமைச்சர் இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து கூறி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். வெவ்வேறு மதங்களின் நூல்களை படித்து பின்னர் ஒருவர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ராயரெட்டி அனைத்து மதங்களிலும் நிபுணர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ராஜினாமா
இந்த சர்ச்சை எழுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர் பி. நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சித்தராமையா அமைச்சரவையில் இருந்தபோதும் அவர் இதேபோல ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் சிவக்குமார் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு குழப்பங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர் மாறாக தொடர்ந்து சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications
