"இடுப்பில் துப்பாக்கி.." பார்த்தவுடன் பதறிய சித்தராமையா! மிக அருகே சென்ற ஆசாமி! அடுத்து என்ன நடந்தது
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் அம்மாநில முதல்வர் சித்தராமையாவை துப்பாக்கி வைத்திருந்த ஆசாமி மிக அருகே நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்கள் தான் இருக்கும் நிலையில், நாடு முழுக்க தீவிரமான பிரசாரம் நடந்து வருகிறது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 என்று இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி மோதல் என்பதால் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இதற்கிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரச்சாரத்தில் மிகப் பெரிய ஒரு பாதுகாப்பு விதிமீறல் நடந்துள்ளது.
சித்தராமையா: அங்கு நடந்த பிரச்சார பேரணியின் போது திறந்த வாகனத்தில் இருந்த முதல்வர் சித்தராமையாவை திடீரென ஒருவர் நெருங்கினார். வாகனத்தில் ஏறிய அந்த நபர் சித்தராமையாவுக்கு மிக அருகே சென்றார். மேலும், அவர் அருகில் உள்ளவர்களுக்கு மலர் மாலைகளையும் போட்டுள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் அவர் தனது பெல்டில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார்.
முதல்வருக்கு அருகே எந்தவொரு அனுமதியும் இல்லாமல் இப்படி ஒரு நபர் செல்வதே பாதுகாப்பு குறைபாடு தான். அதுவும் துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர் இவ்வளவு அருகே செல்வது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
என்ன நடந்தது: பெங்களூருவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளும், காங்கிரஸின் லோக்சபா வேட்பாளருமான சவுமியா ரெட்டிக்காக ஆதரவாக சித்தராமையா பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போது தான் இந்தச் சம்பவம் நடந்தது. இப்படி சித்தராமையாவுக்கு மிக அருகே சென்ற அந்த நபர் ரியாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இடுப்பில் துப்பாக்கி உடன் சித்தராமையா அருகே சென்ற அவர், அந்தத் தலைவர்களுக்கு கூலாக மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்கினார்.
யார் அந்த ஆசாமி: அவர் கீழே இறங்கிய பின்னரே சித்தராமையா உள்ளிட்டோர் அவரிடம் துப்பாக்கி இருப்பதைப் பார்த்துள்ளனர். இந்தச் சம்பவம் மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆன நிலையில், போலீசார் இந்தச் சம்பவம் குறித்தும் அந்த நபர் குறித்தும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதாவது ரியாஸ் மீது பல ஆண்டுகளுக்கு முன்பு மிக மோசமான தாக்குதல் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக அந்தத் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார். அப்போது முதலே துப்பாக்கி வைத்துக் கொள்ள அவருக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது.
பொதுவாகத் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெற்று இருந்தாலும் கூட தேர்தல் காலங்களில் அதை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதே விதி. ஆனால், இவருக்கு மட்டும் ஆயுதத்தை போலீஸ் நிலையத்தில் சரண்டர் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விளக்கம்: போலீசார் மேலும் கூறுகையில், "இந்த சம்பவம் வில்சன் கார்டனுக்கு அருகே நடந்துள்ளது. அவர் உரிமம் பெற்றே துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் மீது ஏற்கனவே மோசமான தாக்குதல்கள் நடந்துள்ளதால் தற்காப்புக்காக ரியாஸால் துப்பாக்கியை வைத்திருக்கிறார். இருப்பினும், துப்பாக்கியுடன் அவர் முதல்வருக்கு மிக அருகே சென்றது தவறு. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
இந்தச் சம்பவம் நடந்த உடனேயே பாஜக இதைக் கையில் எடுத்து விமர்சிக்க ஆரம்பித்துவிட்டது. சித்தராமையா மாலை அணிவித்த அந்த நபரை ரவுடி என விமர்சித்துள்ள பாஜக, சட்ட ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications