‘‘எல்லாத்தையும் சொல்ல முடியாது".. 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டது ஏன்? டிகே சிவக்குமார் அடாவடி
பெங்களூர்: ''எல்லா விஷயத்தையும் எல்லோருக்கும் தெரிவிக்க முடியாது. என்னவெல்லாம் உண்மை உள்ளது என்பது பற்றி காலையில் எனக்கு தகவல் வந்துள்ளது. வனத்துறையினர் முதற்கட்ட தகவலை முழுவதுமாக தெரிவித்துள்ளனர். மாமிசம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்று 3 தமிழர்களை வனத்துறையினர் சுட்டு கொன்ற வழக்கு பற்றி கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளது. இது ஈரோடு எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் காவிரி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா எனும் பகுதியின் அருகே ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் நேற்று காலையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். இந்த பகுதியில் சிலர் வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின்படி அங்கு வனத்துறையினர் சென்றனர்.
அப்போது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் தொமியார்பாளையா கிராமத்தில் வசித்து வருவதும் அவர்கள் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது. அதோடு ஒருவர் தப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனப்பாதுகாலர் மாரிசாமி கூறியதாவது: ''சரணாலய பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது 4 பேர் ஓடினர். சரணடையும்படி கூறினோம். ஆனால் அவர்கள் சரணடையவில்லை. பிடிக்க சென்ற வனத்துறையினரை தாக்கினர். அதோடு நாட்டு துப்பாக்கியால் வனத்துறையினரை நோக்கி சுட்டனர். தற்காப்புக்காக வனத்துறையினரும் சுட்டனர். இதில் 3 பேர் பலியாகி உள்ளனர்'' என்றார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்களை கர்நாடகா வனத்துறையினர் சுட்டு கொன்றதாக அரசியல் கட்சி தலைவர்கள் கொதித்து வருகின்றனர். வனத்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு கர்நாடகா அரசு இழப்பீடு வழங்க வேண்டும். 3 பேரையும் சுட்டு கொன்றவர்களை கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் இந்த விவகாரம் பற்றி கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிகே சிவக்குமார், ''எல்லா விஷயத்தையும் எல்லாருக்கும் தெரிவிக்க முடியாது.என்னவெல்லாம் உண்மை உள்ளது என்பது பற்றி காலையில் எனக்கு தகவல் வந்துள்ளது. வனத்துறையினர் முதற்கட்ட தகவலை முழுவதுமாக தெரிவித்துள்ளனர். மாமிசம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்று கூறி சென்றார்.
வேட்டையாடியதாக கூறி தமிழர்கள் 3 பேரை கர்நாடகா வனத்துறையினர் கொன்றது இருமாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கும்போது கர்நாடகா முதல்வர் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளிக்காமல் எல்லா விஷயத்தையும் எல்லோரிடமும் கூற முடியாது. உண்மையான தகவல் தனக்கு கிடைத்துள்ளது என்று கூறி அதனை வெளியே சொல்லாமல் மறைக்கிறார். இது இருமாநிலங்களுக்கு இடையே கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
