பிரஜ்வல் ஆபாச வீடியோ சர்ச்சை.. வீடுகளிலேயே முடங்கி போன பெண்கள்.. ஹாசனில் என்ன நடக்கிறது! பகீர் தகவல்
பெங்களூர்: பிரஜ்வால் ஆபாச வீடியோக்கள் விவகாரத்தால் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் பலரும் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு மொத்தமாக கிளம்பிவிட்டனராம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதி ஜேடி(எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான எச் டி தேவகவுடாவின் கோட்டை என்றே சொல்லலாம்.

தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் இந்த ஹாசன் தொகுதியில் இருந்து தான் கடந்த முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த முறை அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
பகீர்: இந்த நேரத்தில் பிரஜ்வலுக்கு மட்டுமின்றி மொத்தமாகக் கர்நாடக அரசியலையே அதிர வைக்கும் சம்பவம் நடந்தது. அதாவது பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்திருந்த நிலையில், அவை வெளியாகிப் பரபரப்பை கிளப்பியது. இந்த வீடியோ அங்குப் பரவி வரும் நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே கடந்த 10 நாட்களாக அஞ்சும் சூழலே நிலவுகிறது.
ஏற்கனவே பிரஜ்வல் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது வழக்கைச் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய புகாரில் அவரது தந்தை ரேவண்ணாவை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
செல்வாக்கு: ஹாசன் நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஹகரே கிராமத்தில் உள்ள கடைக்காரர் இது தொடர்பாகக் கூறுகையில், "இங்கு ஒட்டுமொத்த கிராமமும் ரேவண்ணா கட்டுப்பாட்டில் உள்ளது. நீங்கள் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகச் சொன்னாலும் அது அவர்களின் காதுகளுக்கே போய்விடும். அந்தளவுக்கு அவருக்கு இங்கே செல்வாக்கு அதிகம்" என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வலுக்கு எதிரான முதல் எஃப்ஐஆர் ஏப்ரல் 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.. அப்பகுதி மக்கள் இது குறித்து கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் ரேவண்ணா வீட்டில் வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்தவர். அவரது சில வீடியோக்கள் இணையத்தில் பரவ தொடங்கின. அதன் பின்னர் அவர் தனது வீட்டையே காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார்" என்றார்.
கடுமையாகப் பாதிப்பு: இந்தச் சம்பவத்தால் ஜேடிஎஸ் கட்சியில் உள்ள அனைவரையும் பாதித்து இருக்கிறது. ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் பலரும் பிரஜ்வலுடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி வருகிறார்களாம். சில இடங்களில் பிரஜ்வலுடன் இருந்த தொடர்பு காரணமாக ஆண்கள் பலரும் தங்கள் மனைவிகளிடம் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் மாவட்டத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரும் பிரஜ்வலுக்கு எதிராகப் புகார் அளித்திருந்தார். அதில் பிரஜ்வல் தன்னை மூன்று ஆண்டுகளாகப் பலாத்காரம் செய்ததாகவும் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டதாகவும் புகார் அளித்திருந்தார். வீடியோ வெளியான மறுநாளே அந்த பெண்ணும் குடும்பத்துடன் ஊரை காலி செய்துவிட்டுப் போய்விட்டாராம்.
அடையாளங்கள்: பலருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களைத் தெரிந்துள்ளதால் இது பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் தெரிய வந்துள்ளதால், பல குடும்பங்களும் ஹாசனை விட்டு வெளியேறிவிட்டனர்.
உள்ளூரில் கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகையில், "பெண்களின் முகத்தை வெளிப்படுத்துவது உண்மையில் தவறு. அவர்களில் சிலரை எனக்கும் தெரியும். அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.. அவர்கள் திரும்பி வருவார்களா என்றும் தெரியவில்லை.. ஹாசன் மாவட்டத்தில் ரேவண்ணாவின் குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு வாழ்வது கஷ்டம்.. இதன் காரணமாகவே அந்த பெண்கள் புகார் கூட அளிக்கவில்லை" என்றார்.
தேவகவுடா: பல உள்ளூர் ஜேடிஎஸ் நிர்வாகிகள் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், சிலருக்கு தேவகவுடா மீது அனுதாபமும் ஏற்பட்டது. கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பிரஜ்வல் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். தேவகவுடா தனது வாழ்க்கையை மொத்தமாகத் தியாகம் செய்து அரசியல் பாரம்பரியத்தைக் கட்டமைத்தார். அது இப்போது பிரஜ்வாலின் குற்றச் செயல்களால் சர்வ நாசம் ஆகிவிட்டது" என்றார்.
மொத்தமாக முடிஞ்சது: இந்த வீடியோ வெளியாக தொடங்கியதில் இருந்து ஜேடிஎஸ் கட்சியினரால் பிரச்சாரம் கூட செய்ய முடியவில்லையாம். பிரஜ்வல் மீது மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் போது எப்படி வாக்கு கேட்க முடியும் என்கிறார்கள் ஜேடிஎஸ் நிர்வாகிகள்.
படுவலஹிப்பே என்ற கிராமத்தில் தான் பிரஜ்வல் குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது. அங்கு அவர் தனது நண்பர்களுடன் வந்து பார்ட்டி செய்து தெரியும் என்ற போதிலும் இப்படியொரு கொடூரம் அங்கு நடந்துள்ளது என்பது தெரியாது என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.
போலீஸ் சொல்வது என்ன: இந்த விவகாரம் குறித்து போலீசார் கூறுகையில், "வீடியோக்கள் குறித்து போலீசாருக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால், அது இந்தளவு மோசமானது என்பது யாருக்கும் தெரியாது. கடந்த 2023 கர்நாடக தேர்தல் சமயத்திலேயே இந்த பென் டிரைவ் பேசுபொருள் ஆனது. ஆனால், அப்போது வீடியோ எதுவும் வெளிவரவில்லை. இப்போது வீடியோ லீக் ஆன பிறகே இது எந்தளவுக்கு மோசம் என்பது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் மொத்தம் 2900க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருக்கிறது" என்றார்.
இந்த வீடியோக்கல் இணையத்தில் லீக் ஆகி பகீர் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வந்தாலும் கூட பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதி பெண்களை ஊரை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டனர். மற்றவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போய் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications