பெங்களூரில் மாதம் ரூ.21,000 இருந்தாலே போதும்.. ராஜா மாதிரி வாழலாம்.. இளைஞர் பகிர்ந்த சீக்ரெட்
பெங்களூர்: இந்தியாவில் மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாக பெங்களூர் அறியப்படுகிறது. அங்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் நபர் கூட ஊதியம் போதவில்லை என சமூக வலைத்தளங்களில் சொல்வதை நாம் பார்த்து இருப்போம். ஆனால், இப்போது நெட்டிசன் ஒருவர் வெறும் ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் பெங்களூரில் எப்படித் தான் வசதியாக இருக்கிறேன் என்பதைப் பதிவிட்டுள்ளார். அவரது போஸ்ட் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
கர்நாடகத் தலைநகர் பெங்களூர் இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் தலைநகராகவும் கருதப்படுகிறது. மேலும், ஏகப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அங்கு அமைந்துள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பெங்களூருக்கு வருகிறார்கள். இதனால் அங்கு வாழ்க்கைக்கான செலவுகளும் அதிகரிக்கிறது.

பெங்களூர் இளைஞர்
இதன் காரணமாகவே பெங்களூர் என்பது நாட்டின் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பெங்களூரில் வாழும் பலரும் தங்களுக்குச் சம்பளம் போதவில்லை என இணையத்தில் புலம்பி நாம் பார்த்து இருப்போம். அதுவும் ரூ..70000- ரூ.80000 சம்பளம் வாங்குவோர்.. அவ்வளவு ஏன் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுவோர் கூட இதுபோல சொல்லி நாம் பார்த்திருப்போம். இதுபோன்ற போஸ்ட்களுக்கு நடுவே நெட்டிசன் ஒருவர் வெறும் ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் பெங்களூரில் எப்படி வசதியாக இருக்கிறேன் என்பதைப் பதிவிட்டுள்ளார். அது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
22 வயதான அந்த நபர் தனது ரெடிட் பக்கத்தில், மற்றவர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் பெங்களூரில் தனக்கு ஆகும் மாதாந்திர செலவுகளைப் பகிர்ந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பெங்களூரில் இருப்பதாகக் குறிப்பிடும் அந்த நபர், முதலில் செலவுகளைக் குறைக்க நண்பர்களுடன் வாடகை வீட்டைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறாராம். மாத வாடகை ரூ.23 ஆயிரத்தில் தனக்கான பங்கு ரூ.9000 வரும் என அவர் குறிப்பிடுகிறார்.
மாதச் செலவு
மேலும், உணவுக்கு மாதம் ரூ.8,000 செலவாவதாகவும் பொதுப் போக்குவரத்து மற்றும் ரேபிடோவுக்கு மாதம் ரூ.2,000 செலவாவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீட்டின் இதர செலவுகளுக்கு ரூ.2,000 வரை ஆவதாகக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் மொத்தச் செலவு தனக்கு ரூ.21,000 மட்டுமே ஆவதாகவும் அந்த நபர் குறிப்பிடுகிறார்.
மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் அடிக்கடி பார்ட்டி ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பதாலேயே தன்னால் இவ்வளவு குறைந்த செலவில் பெங்களூரில் இருக்க முடிவதாகக் குறிப்பிடுகிறார். அதேநேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் முன்னுரிமையாக இருக்கும் என்றும் இதனால் தங்கள் 20களை முழுமையாக அனுபவிக்க விரும்புவோர் தன்னை பின்பற்ற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
வசதியாக இருக்கலாம்
அவர் தனது ரெட்டிட் தளத்தில் மேலும், "நான் (22) கடந்த 6 மாதங்களாக பெங்களூரில் தனியாக வசித்து வருகிறேன்.. இங்கு எவ்வளவு செலவாகிறது என்று யோசிக்கும் நபருக்கு உதவும் வகையில் எனது மாதாந்திர செலவு விவரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" எனச் சொல்லி தனது செலவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அவர் மேலும், "ஒரு வசதியான வாழ்க்கை முறைக்கு இதுவே போதுமானது.. ஆனால், இதில் உங்களால் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியாது.. ஆனால் சமாளிக்கலாம்... நான் குடிக்க மாட்டேன்.. புகைபிடிக்க மாட்டேன்.. பார்ட்டி செய்வதில்லை, எனவே உங்களின் பிளான் மாறுபடலாம். வாழ்க்கையை என்ஜாய் செய்ய விரும்புவோர் அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
பெங்களூரில் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோரே செலவுகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை எனப் புலம்பி வரும் நிலையில், இவரது போஸ்ட் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இவரது வாழ்க்கை முறையைப் பாராட்டி வருகிறார்கள். நமக்கு என்ன தேவை.. நாம் என்ன செலவு செய்கிறோம் என்பதை பொறுத்தே கையில் பணம் நிற்கும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications