இந்தி விவகாரம்.. "அவர் சொன்னதுதான் சரி!" கிச்சா சுதீப்பிற்கு சப்போர்டாக வந்து நிற்கும் பாஜக முதல்வர்
பெங்களூர்: இந்தி தொடர்பாக அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரபல கர்நாடக நடிகர் கிச்சா சுதீப் நடித்த 'விக்ரந்த் ராணா'. அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி உள்ள இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே இந்தப் படத்திற்கான பிரமோஷன் நடவடிக்கைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தி தேசிய மொழி இல்லை
அப்படி "விக்ரந்த் ராணா' பட புரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், "இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களைத் தயாரிக்கிறார்கள். இந்த படங்களைத் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள்'' எனக் கூறி இருந்தார். இந்தி மொழி குறித்த கிச்சா சுதீப்பின் வீடியோ இணையத்தில் உடனடியாக வைரலானது.

ஏன் டப் செய்கிறீர்கள்
இதற்குப் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்வினை ஆற்றி இருந்தார். இது குறித்து அஜய் தேவ்கன் தனது ட்விட்டரில், "சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார். அதற்குப் பதிலளித்த நடிகர் கிச்சா சதீப், "என்னுடைய பேச்சின் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படிச் சொல்லவில்லை" என்றார்.

கன்னடத்தில் பதில் அளித்தால்
அதேபோல அவர் மற்றொரு பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்குப் புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம்?" என்று பதிலடி கொடுத்தார்.

வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
இதற்கு அஜய் தேவ்கன், "நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி" என்று பதிவிட்டு இருந்தார். அஜய் தேவ்கனின் இந்த கருத்துக்கு இணையத்தில் பலரும் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். பலரும் அஜய் தேவ்கனின் கருத்துக்குப் பதிலடி கொடுத்து வரும் சூழலில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும் இப்போது நடிகர் கிச்சா சுதீப்பிற்கு ஆதரவாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சுதீப் கூறியது சரி
இது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "மொழிகளால்தான் நமது மாநிலங்கள் உருவாகின. பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுதீப் கூறியது சரிதான், அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார். ஏற்கனவே, முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications