தமிழ் தெரிந்தால் வேலை.. அறிவிப்பு வெளியிட்ட பெங்களூர் ஐடி நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த கன்னட அமைப்பினர்
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்கள் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டோருக்கு வேலை வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு பூதாகரமாகி உள்ளது. இதனால் கன்னட அமைப்பினர் கொந்தளித்துள்ளனர். இதற்கிடையே தான், ''தமிழ் அல்லது தெலுங்கு தெரிந்திருந்தால் வேலை'' என்று அறிவிப்பு வெளியிட்ட ஐடி நிறுவனத்தை கன்னட அமைப்பினர் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு eSthenos Technologies Pvt Ltd என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் தமிழ் அல்லது தெலுங்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு யுவ கர்நாடகா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த அமைப்பினர் 'ஈஸ்தெனோஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு சென்று விளக்கம் கேட்டு மன்னிப்பு கோரும்படி தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில், ''நாங்கள் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறோம். பிற மாநிலங்களில் எங்களின் கிளைகள் உள்ளன. இதனால் அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருந்தனர். இதனால் நாங்கள் சமூக வலைதளங்களில தெலுங்கு மற்றும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
இது கடந்த 2 நாட்களாக கன்னட செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் பற்றி விளக்கம் அளித்து உள்ளோம். கன்னடர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயலை நாங்கள் செய்யவில்லை. இது ஒரு டைப்பிங் எரர், தவறால் நடந்துவிட்டது.
இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். கன்னடர்களுக்கு அவமானப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. கன்னடர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். நாங்கள் அனைவரையும் ஆதரிக்கிறோம். எங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்'' என்றார்.
முன்னதாக இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், '' உங்களின் 'ரெஸ்யூம்'மில் தாய்மொழி கன்னடம் என்று கூறியிருந்தால் இண்டர்வியூவில் ரிஜெக்ட் செய்கிறார்கள் என்று நிறைய பேர் வீடியோவில் கூறியிருந்தனர். அது 100 சதவீதம் இல்லை 200 சதவீதம் உண்மை என ஆகியுள்ளது. 100 பேர் பணியாற்றும் நிறுவனங்களில் 3, 4 பேர் மட்டுமே கன்னடர்களாக உள்ளனர்.
கேம்பஸ் இண்டர்வியூக்களை நிறுவனங்கள் பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் மேற்கொள்வது இல்லை. வேறு வேறு மாநிலங்களுக்கு சென்று இண்டர்வியூ செய்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதனை தொழிலாளர் நலத்துறை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முதல்வர் டிகே சிவக்குமார் பிடதி டவுன்ஷிப் உருவாக்கி வேலை வாங்க நினைக்கிறீர்கள். ஆனால் இப்போதைய சூழலில் உங்களால் முடியாது. இதனால் இதற்கு முதலில் தீர்வு கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் ஐடி நிறுவனங்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளார். அதில்,''பெங்களூரு ஐடி நிறுவனங்களில் கன்னடர்கள் வேலைவாய்ப்புகளில் அநீதியை எதிர்கொள்கிறார்கள் என்ற புகார்களைக் கேட்பது வருத்தமளிக்கிறது. தாய்மொழியாக கன்னடம் பேசுபவர்கள் ஓரங்கட்டப்படும் பிரச்சினையை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் வேண்டுமென்றே கன்னடர்களை ஓரங்கட்டுவது கண்டறியப்பட்டால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்'' என வார்னிங் செய்திருந்தார். இந்நிலையில் தான் தமிழ் அல்லது தெலுங்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்ட பெங்களூர் ஐடி நிறுவனத்தை யுவ கர்நாடகா அமைப்பை சேர்ந்தவர்கள் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
