‛‛டிகே சிவக்குமார் தம்பிக்காக களமிறங்கிய திருமா’’.. கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்ல சூறாவளி பிரசாரம்
பெங்களூர்: நாளை மறுநாள் இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்றிருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கர்நாடகாவில் பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு பெங்களூரில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த முறையை போல் அல்லாமல் இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், பாஜகவுக்கு கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நடைபெறும் 13 மாநிலங்களில் கர்நாடகா முக்கியமானதாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஒரு கட்டமாகவும், மே 7ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்திருக்கிறது.
இந்நிலையில் பெங்களூரில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக தான் மேற்கொண்ட பரப்புரையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பகிர்ந்திருக்கிறார். பெங்களூரில்.. பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு மற்றும் பெங்களூர் ரூரல் என 3 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன.
இதில், ரூரல் தொகுதியில் டி.கே.சுரேஷ், தெற்கு தொகுதியில் சௌமியா ரெட்டி, சென்ட்ரல் தொகுதியில் மன்சூர் அலிகான், வடக்கு தொகுதியில் ராஜீவ் கவுடா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். இந்த பரப்புரையில் காங்கிரஸ் தொண்டர்கள் திருமாவளவனுக்கு பிரமாண்ட வரவேற்பளித்துள்ளனர். பழங்களால் ஆன பிரமாண்ட மாலையை அணிவித்து திருமாவுக்கு காங்கிரஸ் வரவேற்பளித்திருக்கிறது.

பரப்புரையில், "இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட BJP-மோடிக்கு வாக்களிக்க கூடாது. ஆகவே, தேசத்தை பாதுகாத்திட காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று திருமா வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடகா மாநிலத்தை பொறுத்த அளவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25+1 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தலா ஒரு தொகுதியில் வென்றது. இந்தமுறை அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. எனவே இரு கட்சிகளும் தீவிரமாக பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன.
பிரசாரத்தில் வரி பகிர்வு, வறட்சி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது. 15வது நிதி கமிஷனுக்கு பிறகு கர்நாடக மாநிலத்திற்கு சேர வேண்டிய வரி பகிர்வு போதிய அளவில் கிடைப்பதில்லை என்றும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.45,000க்கு மேல் கர்நாடகாவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications