பெங்களூர் நகரில் வீடு, பிஜி வாடகை அதிரடியாக உயர்வு.. வழக்கத்துக்கு மாறாக விர்ர்.. மக்கள் கலக்கம்
பெங்களூரு: பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. pgக்களின் வாடகையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் தலைசுற்ற வைக்கும் அளவுக்கு வீட்டு வாடகை கேட்கப்படுவதால், புதிதாக பெங்களூரு வருபவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஐடி நிறுவனங்களின் தலைநகரமான பெங்களூருவில், கிட்டத்தட்ட எல்லா ஐடி நிறுவனங்களுமே அலுவலகத்தில் வந்து வேலை செய்யுமாறு கூறிவிட்டன. கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்த பலரும், இப்போது அலுவலகத்தில் தான் வேலைசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பெங்களூருவிற்கு பலரும் திரும்பிவிட்டார்கள். பெங்களுரூவில் எப்போதுமே குறைவான வாடகைக்கு வீடு பிடிப்பதோ, அல்லது லீசுக்கு வீடு பிடிப்பதோ கடினமாக இருக்கும். இந்நிலையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக ஓரளவு நடுத்தரமான வாடகையில் வீடு கிடைப்பது கூட கடினமாகி உள்ளது. பிஜிக்களும் வாடகையை உயர்த்தி விட்டன. 20 ஆயிரம் இருந்த இடத்திற்கு தடலாடியாக 40 ஆயிரம் என்கிற அளவிற்கு கூட உயர்ந்துள்ளது.
பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் 2 bhk வீடு சுமார் ரூ. 27,000 (மெயிண்டனன்ஸ் சேர்க்காமல்) ஆக உள்ளது.இந்நிலையில் இந்த ஆண்டு வாடகை சுமார் 7-12% அதிகரிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதேபோல் பெங்களூரு அவுட்டர் ரிங் ரோடு, பெல்லந்தூர் மற்றும் மன்யாதா தொழில்நுட்ப பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான், சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தங்கி உள்ளனர். இந்த பகுதிகளில் வாடகை இந்த ஆண்டு 30 முதல் 50 சதவீதம் என்கிற அளவில் கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெங்களூரு சுமார் 13,500 குடியிருப்புகள் புதிதாக உருவாகி உள்ளதாக அனரோக் என்ற ஆய்வு அறிக்கை கூறுகிறது, மும்பையை ஒப்பிடும் போது பெங்களூருவில் இந்த எண்ணிகை மிக குறைவு ஆகும். இந்தியாவிலேயே பெங்களூருவில் தான் வீட்டு வாடகை அதிகமாக உள்ளதாக கூற்று உள்ளது. 2019ம் ஆண்டு முதல் 2022 வரை பெங்களூரின் ஒயிட்ஃபீல்டில் சராசரியாக வாடகை 18% அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் ராஜாஜி நகரில் 16% அதிகரித்துள்ளது . வர்தூரில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை கிட்டத்தட்ட 10% வாடகை அதிகரித்துள்ளது.
ஒரு பக்கம் வாடகை உயர்வுக்கு மத்தியில் ஐடி பணியாளர்கள் தங்களுக்கு ஏற்ற வீடுகளை எப்படியாவது தேடி கண்டுபிடித்துவிட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் புதிய ஐடி ஊழியர்கள் விரும்பி தங்கும், பிஜி ஹாஸ்டல்களின் வாடகை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது.
இதனால் புதிய ஐடி ஊழியர்கள் கதிகலங்கி போய் உள்ளனர். குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள பி.ஜி.களில் ஒரு நபருக்கு ரூ.13,000 ( ஒரு அறையை மூன்று பேர் ஷேர் பண்ண வேண்டும்) முதல் ரூ.21000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கொரோனாவிற்கு பின்னர், கடந்த சில மாதங்களில் அதிகப்படியான மாணவர்கள் பெங்களூரு நகரத்திற்கு வருவதால் வாடகை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாடகை, வீட்டு வாடகை உயர்வால் பெங்களூருவைச் சேர்ந்த மக்கள் பலர், நொந்து போய் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இப்படியே ஏற்றிக்கொண்டே போனால் வாழ்றது எப்படி, வாடகைக்கு குடியிருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து சங்கம் அமைத்தால் தான் இதற்கு தீர்வு என்று கவலைகளை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications