6 பேர்.. ரூ.1.87 லட்சம் முதலீடு! ஒரு சின்ன ரூம்தான் ஆபீஸ்! இன்று பல லட்சம் கோடி ஆலமரமாக நிற்கும் HCL
டெல்லி: இன்று இந்தியாவின் முன்னணி ஐடி சர்வீஸ் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஹெச்.சி.எல் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால், இந்த மாபெரும் நிறுவனத்தின் தொடக்கம் மிகவும் எளிமையானது. வெறும் ரூ.1.87 லட்சம் முதலீடு, 6 இளைஞர்கள், டெல்லியில் ஒரு சிறிய அலுவலகம், ஒரு கம்ப்யூட்டரின் மாடல் என எளிமையாக அதேநேரம் துணிச்சலாக தொடங்கப்பட்ட நிறுவனமே இன்று மிக பெரிய ஆலமரமாக நிற்கிறது.
இப்போது இந்தியாவின் மிக பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாயப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் ஹெச்.சி.எல் நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதற்கிடையே ஹெச்.சி.எல் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான அஜய் சவுத்ரி, தங்கள் நிறுவனத்தின் 50 ஆண்டு பயணத்தை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

6 நம்பிக்கை இளைஞர்கள்
அது 1976ஆம் ஆண்டு... இந்தியாவில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையே பெரும்பாலான மக்களுக்கு புதிதாக இருந்த காலகட்டம். அப்போது சிவ் நாடார், அர்ஜுன் மல்ஹோத்ரா, யோகேஷ் வைத்யா, சுபாஷ் அரோரா, டிஎஸ் பூரி மற்றும் அஜய் சவுத்ரி என 6 பேர் தங்களது வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர்.
அந்த காலத்தில் இன்றுபோல் ஸ்டார்ட்அப் கலாச்சாரமோ, வென்ச்சர் கேபிடல் முதலீடுகளோ கிடையாது. இருந்தாலும், மைக்ரோபிராசஸர் உலகையே மாற்றப்போகிறது என்ற நம்பிக்கை இந்த 6 பேருக்கும் இருந்தது. தங்களது சேமிப்பு, கடன் மற்றும் தனிப்பட்ட சொத்துகளை பயன்படுத்தி அவர்கள் ரூ.1.87 லட்சம் திரட்டினர். ஒருவர் தனது காரையே விற்று பணம் திரட்டியதாக அஜய் சவுத்ரி நினைவுகூர்ந்துள்ளார்.
சிறிய ரூம்
அவர்களது முதல் அலுவலகம் டெல்லியின் கோல்ஃப் லிங்க்ஸ் பகுதியில் இருந்த ஒரு சிறிய அறை. அப்போது தங்களது நிறுவனத்துக்கு மைக்ரோகாம்ப் (Microcomp) என்று பெயரிட்டு இருந்தனர்.. இந்தியாவிலேயே ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களது கனவாக இருந்தது.
அது லைசன்ஸ் காலகட்டம்.. பெரும்பாலான பொருட்களை விற்க லைசன்ஸ் தேவைப்பட்டது. ஆனால், அவர்களிடம் எந்தவொரு லைசன்ஸும் இல்லை. இதுவே அவர்களுக்கு மிக பெரிய சவாலாக இருந்தது. அப்போது எல்லாம் உடனடியாக சைலன்ஸும் கிடைத்துவிடாது. இதனால் காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ஏற்கனவே லைசன்ஸ் வைத்திருந்த உபி எலக்டிரானிக்ஸ் கார்பரேஷன் உடன் கை கோர்த்தனர். இதுவே பின்னாட்களில் ஹெச்.சி.எல் உருவாக வழிவகுத்தது.
கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் முழுமையாக ரெடியாகும் வரை அவர்கள் காத்திருக்க விரும்பவில்லை. எனவே, டிசைன் நிலையில் இருந்த கம்ப்யூட்டரையே விற்பனை செய்ய தொடங்கினோம். வெறும் மாடலை மட்டுமே வைத்து விற்பனையைத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார் அஜய் சவுத்ரி! அவர்களின் பிரதிநிதிகள் நாடு முழுவதும் சென்று, இந்த புதிய தொழில்நுட்பத்தில் பல நிறுவனங்களை முதலீடு செய்ய சம்மதிக்க வைத்தன.
அப்போது ஹெச்.சி.எல் நிறுவனத்தின் முதல் ஆர்டர்கள் ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றிடமிருந்து கிடைத்தன. அப்போது கோவையில் ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கு மிக பெரிய சவால் காத்திருந்தது. அப்போது ஏற்கனவே பிரபலமாக இருந்த டிசிஎம் டிபி என்ற நிறுவனத்துடன் ஹெச்.சி.எல் போட்டி போட வேண்டி இருந்தது. என்ன தான் டிசிஎம் பெரிய நிறுவனமாக இருந்தாலும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் திறமை, வேகம், உத்வேகம் ஆகியவை அவர்களுக்கு அதிக ஆர்டர்களை பெற்று கொடுத்தது. முதலில் ஒரு ஆர்டர் பின்னர் மேலும் அது 5 ஆர்டர்களாகவும், அதன் பிறகு 10 ஆர்டர்களாகவும் மாறியது.
50 ஆண்டுகள்
பெரியளவில் பணமோ ஆட்களோ இல்லாத போதிலும், பெரிய கனவுகளுடன் இருந்ததே ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்கிறார் அஜய் சவுத்ரி! இந்தியாவிலேயே முதலில் கம்ப்யூட்டர்களை உருவாக்கிய ஹெச்சிஎல், நான்காவது ஆண்டிலேயே சிங்கப்பூரிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஹெச்.சி.எல் சர்வதேச அளவில் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்துள்ள நிலையில், அதன் பின்னணியில் பல கஷ்டங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
பெரிதாக கனவு காணுங்கள்
அவர் மேலும், "6 பேர், டெல்லியில் ஒரு சிறிய அலுவலகம், மாடலாக மட்டுமே இருந்த ஒரு கம்ப்யூட்டர், கதவுகளை தொடர்ந்து தட்டுவதற்கான துணிச்சல்... இதுதான் உண்மையான ஹெச்.சி.எல். கதை" என அவர் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு செய்த பங்களிப்புக்காக அஜய் சவுத்ரிக்கு 2011ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
ஹெச்.சி.எல். தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், அவர் தனது போஸ்ட்டை, "பெரிய கனவு காணுங்கள். ரிஸ்க் எடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, Just Aspire" என பதிவிட்டு முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
