ஒரு கிலோ தங்கம் இருந்தால் ப்ரைவேட் ஜெட் விமானமே வாங்கலாம்! ரேட் கணிப்பு இதோ
சென்னை: 1990களில் ஒரு கிலோ தங்கம் வாங்குற காசுக்கு ஒரு மாருதி 800 கார் தான் வாங்க முடிந்தது. அதுவே 2005ல் ஒரு கிலோ தங்கத்தின் காசுக்கு இன்னோவோ கார் வாங்க முடிந்தது. 2019ம் ஆண்டு பிஎம்டபிள்யூ கார் வாங்க முடிந்தது. 2025ல் ஒரு கிலோ தங்கம் வாங்கும் காசுக்கு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் வாங்கிவிட முடிகிறது.2030ல் ரோல்ஸ் ராய்ஸ் காரே வாங்கிவிட முடியும் என்கிறார்கள். 2040ல் ஒரு கிலோ தங்கம் வாங்கும் காசுக்கு தனி விமானமே வாங்கிவிட முடியும் போல! ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்காக கிண்டலாக கூறியுள்ளார்.
இந்தியாவில் தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வேகத்தில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. பரிதாபங்கள் கோபி சுதாகர் பாணியில் சொல்வது என்றால், யாராவது போய் நிறுத்த செல்லுங்கடா.. என்ற வகையில் இருக்கிறது. தங்கம் விலை ஏறிக்கொண்டிருப்பது குறித்து கார்ப்பரேட் உலகின் பிரபலமும், RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் கோயங்கா சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு, பலரையும் திகைக்க வைத்துள்ளது.

கோயங்காவின் கணக்குப்படி, ஒரு கிலோ தங்கத்தின் மதிப்பு கடந்த முப்பது ஆண்டுகளில் எப்படி ஒரு 'குட்டி காரிலிருந்து' 'வானில் பறக்கும் விமானம்' வரை வளர்ந்துள்ளது என்பதை பாருங்கள்
1990 மாருதி 800 வாங்க முடியும்.. போதும்டா சாமி.. இதுவே பெரிய சொத்து
2000 எஸ்டீம் கார் வாங்க முடியும்.. கார் கொஞ்சம் நீளமானது, தங்கத்தின் அந்தஸ்தும் ஏறியதும்!
2005 இன்னோவா கார் வாங்க முடியும்.. தங்கத்துக்கு ஃபேமிலி வேல்யூ வந்தாச்சு!
2010 ஃபார்ச்சூனர் கார் வாங்க முடியும்.. தங்கம் என்பது வெறும் நகை இல்லை, பவர் ஸ்டேட்மெண்ட்!
2019 BMW கார் வாங்க முடியும். இப்போது தங்கம் ஒரு சர்வதேச பிராண்ட்!
2025 (தற்போது) ₹1.25 கோடி! மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் வாங்க முடியும். இனி கார் வாங்கணும்னா டிஃபண்டர் தான் வாங்குவேன்!
2030 (எதிர்பார்ப்பு) ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியும். அடுத்த ஐந்தாண்டுகளில் தங்கம் சக்கரவர்த்தியாகும்!
2040 (எதிர்பார்ப்பு) பிரைவேட் ஜெட் வாங்க வாங்கக்கூட முடியும். ஒரு கிலோ தங்கம் வாங்கும் காசுக்கு, தனி விமானமே வாங்க முடியும் (தங்கம் $100,000 டாலரைத் தாண்டினால் நடக்கலாம்)
கோயங்கா வெளியிட்ட இந்தக் காலண்டர்-அடிப்படையில் செய்யப்பட்ட வாகனங்களின் பட்டியல் நம்மை சிரிக்க வைக்கும் வகையில் இருந்தாலும், இதில் இருக்கும் பொருளாதார உண்மை மறுக்க முடியாதது. ஏனெனில் உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதன் காரணமாக தங்கத்திற்கு கிராக்கி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த 35 வருட வரலாறை பார்க்கும் போது, தங்கத்திற்கு என்றைக்குமே மவுசு குறையாது.
எனவே இந்த ஒப்பீட்டை பார்க்கும் இந்தியர்களுக்கு தங்க நகை பெட்டி என்பது ஒரு 'நகரும் ஆட்டோமொபைல் ஷோரூம்' ஆக உணர்த்தியுள்ளது. அதேபோல் கோயங்கா கிண்டலாக மேலும் கூறுகையில், "இது இப்படிப் போனால், 2050-ல் ஒரு கிலோ தங்கத்திற்குச் செவ்வாய்க் கிரகத்தில் பிளாட் தருவார்கள் போல! நகைக்கடைக்குச் செல்லும் முன், நாம் வாங்கும் தங்கம், எந்தப் பெரிய சொத்தை மிஸ் செய்கிறோம் என்று யோசிக்க வைக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.
விலை உயர்வுக்குப் பின்னால் உள்ள நிஜமான காரணம்
ஹர்ஷ் கோயங்கா கூறுவது போல தங்கத்தின் இந்த அதிரடி விலை உயர்வை வெறும் காமெடியாக படித்து கடந்துவிட முடியாது. இதற்கு பினன்ல் மிகப்பெரிய சர்வதேச காரணங்கள் உள்ளன: உலக நாடுகளின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை இருப்பது தான் தங்கம் விலை இப்படி விண்ணை முட்ட காரணம் ஆகும். ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் காசா போர், சீனா அமெரிக்கா வர்த்தக போர், அமெரிக்கா இந்தியா வர்த்தக போர் உள்பட பல்வேறு பதட்டங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான புகலிடமான தங்கத்தை நோக்கித் தள்ளியிருக்கிறது.
இது மக்களை மட்டுமல்ல பல நாடுகளையும் தள்ளியிருக்கிறது. பல நாடுகளின் மத்திய வங்கிகள் டாலர் இருப்புக்களைக் குறைத்து, தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவிக்கிறார்கள்.. இது தங்கத்தின் தேவை மற்றும் விலையை மேலும் அதிகரிப்பதால் விலை உயருகிறது. அதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும்போது, உலகளவில் டாலரில் விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.. அதுவும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கிறது.
எனவே இன்றைய சூழலில் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட கார் தங்கம் குறித்த ஒப்பீட்டினை பார்க்கும் போத, தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல; அது காலப்போக்கில் தனது மதிப்பையும் வாங்கும் சக்தியையும் அசுர வேகத்தில் தக்க வைத்துக் கொள்ளும் மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை உணர முடிகிறது.












Click it and Unblock the Notifications