டாலரை காலி செய்யும் தங்கம்.. வியூகத்தை மொத்தமாக மாற்றிய உலக நாடுகள்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை என்பது எப்போதுமே பல சர்வதேச காரணங்கள் அடிப்படையில் அமையும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் தங்கம் விலைக்கும் இடையே வலுவான தொடர்பு இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா டாலர் மற்றும் தங்கம் தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் மிக முக்கிய கருத்தைக் கூறியுள்ளார்.
கடந்தாண்டு தங்கமே பொதுமக்களுக்கு அதிகபட்ச லாபத்தைக் கொடுத்திருந்தது. ஒரே ஆண்டில் சுமார் 80% வரை தங்கம் விலை ஏறியிருந்தது. தங்கத்தின் வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் அது அந்தளவுக்கு ஏறியதே இல்லை. இந்தாண்டும் அதேபோல ஒரு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தங்கத்தை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

தங்கம்
தங்கம் விலை கடந்தாண்டு இந்தளவுக்கு உயர முக்கிய காரணமே அமெரிக்காவும் அதன் அதிபர் டிரம்பும் தான். வரிகளில் ஆரம்பித்து அவர் ஏகப்பட்ட விஷயங்களைச் செய்தார். தடாலடியாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதனால் சர்வதேச அளவில் பதற்றமான ஒரு சூழல் நிலவிய நிலையில், தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கத்திற்கும் டாலருக்கும் இடையே இருக்கும் ஒரு தொடர்பு குறித்து விளக்கியுள்ளார். உலக நாடுகள் தங்கத்தையும் டாலரையும் எப்படிப் பார்க்க ஆரம்பித்துள்ளது என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. மேலும், சாதாரணப் பொதுமக்கள் தங்கத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்தும் அவர் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
டாலரை மிஞ்சும் தங்கம்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இப்போது டாலருக்கும் தங்கமும் சமமாகிவிட்டது.. இதுதான் ரொம்பவே முக்கியமானது. அதாவது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வசம் டாலரை அதிகம் வைத்து இருப்பார்கள். தங்கத்தை கொஞ்சமாக வைத்திருப்பார்கள். இப்போது ஒரு பக்கம் தங்கம் விலை ஏறி இருக்கிறது. இன்னொரு பக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கு குவித்தது. இதனால் டாலரும் தங்கமும் சமமாகிவிட்டது. கூடிய சீக்கிரம் டாலரை தாண்டி தங்கம் போய்விடும்.
ரஷ்யன் டேங்கரை அமெரிக்கப் படைகள் நிறுத்தியுள்ளன. இதனால் ரஷ்யா அதிருப்தி அடைந்துள்ளது.. எனது பொறுமையா சோதிக்க வேண்டாம்.. அடுத்த முறை இதுபோல நடந்தால் எதாவது செய்துவிடுவேன்.. பிறகு என்னைக் குறை சொல்லக் கூடாது என புதின் சொல்லியுள்ளார். இதுபோல புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தை வேறு வழியில்லாமல் நாம் வைத்திருக்கிறோம்.
மக்கள் சொல்வது
டெலாய்ட் நிறுவனம் சமீபத்தில் மக்களிடையே ஒரு சர்வே எடுத்து இருந்தது. அதில் மக்கள் யாரும் தாங்கள் தங்கத்தை ஒரு கன்ஸ்யூமர் குட்ஸாக பார்ப்பதில்லை என கூறியிருந்தனர். செல்வத்தைச் சேர்க்கும் ஒரு விஷயமாகவே மக்கள் பார்க்கிறார்கள். தங்கமே நல்ல லாபம் கொடுக்கிறது.. எஃப்டியை காட்டிலும் அதிக லாபம் தருகிறது என மக்கள் சொல்லி இருக்கிறார்கள். அதுவே செல்வத்தைச் சேமிக்கும் ஒன்றாக மக்கள் பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே தங்கத்தை வாங்குவதே சரி என்கிறேன்" என்றார்.
உக்ரைன் மீது புதின் போரை ஆரம்பித்தபோது, ரஷ்யா வசம் இருந்த டாலரை முடக்க அப்போதைய அதிபர் பைடன் உத்தரவிட்டார். இதை அப்போதே ரகுராம் ராஜன் உள்ளிட்ட பல சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர். அமெரிக்காவின் இந்த உத்தரவால் எங்கு எதிர்காலத்தில் தங்களிடம் இருக்கும் டாலரையும் அமெரிக்கா முடக்கிவிடுமோ என அஞ்சி பல உலக நாடுகளைத் தங்களிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பை அதிகரிக்க ஆரம்பித்துக் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications