சித்துவுடன் சந்தித்தது ஏன்.. அரை மனதாக இருக்கு.. பரபரப்பு தகவல்களை சொன்ன ஹர்பஜன் சிங்!
சண்டீகர்: பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து தமக்கு அழைப்பு வருவதாகவும் எனது மனதிற்கு சரி என பட்டால் மட்டுமே இணைவேன் என்றும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் 23 ஆண்டுகள் வரை இந்திய கிரிக்கெட்டில் பயணித்தார். அவரின் இந்த நீண்ட நெடிய பயணம் நேற்று முன் தினத்துடன் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் 23 ஆண்டு கால அழகான நினைவில் நிற்கும் பயணத்தில் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

தமிழ்
ஹர்பஜன் சிங்கிற்கு தமிழ் மீதுள்ள பற்றால் அவர் தமிழ் கற்றுக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் தமிழிலேயே ட்வீட்டுகளை போட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தமிழில் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் ஓய்வை அறிவித்த அவர் சித்துவை சந்தித்தார்.

சித்து ட்விட்டர்
இதுகுறித்து சித்து தனது ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு இன்னொரு மறைமுக செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதாவது அந்த படத்திற்கு, " படத்தில் சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ளன. பாஜி என்ற ஒளிரும் நட்சத்திரத்துடன் " என்ற வரிகளை சித்து பயன்படுத்தியுள்ளார்.

கவலை
இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் சொல்லப்பட்டது. இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், வருங்கால திட்டம் குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கிரிக்கெட்தான் எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்தது. அதனால் அதனுடனே தொடர்பில் இருக்கிறேன். அரசியல் பயணம் என்பது சற்று கவலைக்குரியதாக இருக்கிறது.

யோசனை
அதை நான் எனக்குள்ளே முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். அது எப்போது நடக்கிறதோ அப்போது உங்கள் அனைவருக்கும் சொல்லி அனுப்புகிறேன். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அதுகுறித்து நான் எதையும் நினைக்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது. எனவே நான் எனக்குள் நன்றாக யோசிக்க வேண்டும்.

அரை மனம்
அரசியல் என்பது மக்கள் பணி. அதை ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். அரை மனதுடன் செய்ய எனக்கு விருப்பமில்லை. அரசியலுக்கு செல்லலாம் என எப்போது மனதளவில் நான் தயார்படுத்திக் கொள்கிறேனோ அப்போது அறிவிக்கிறேன். சித்துவை சக கிரிக்கெட் வீரர் என்ற முறையில்தான் பார்த்தேன் என்றார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளையும் 236 ஒரு நாள் போட்டிகளையும் 28 டி 20 மேட்ச்களையும் விளையாடியுள்ளது. இதுவரை 294 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications