சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளைப் பறித்துத் தாருங்கள்… மு.க. ஸ்டாலின் மடல்

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டை மீட்கவும், நம் மக்கள் நலம்பெறவும், நாற்பதிலும் வெற்றியைப் பரிசாக நல்கிடுவீர் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்து மடலில் கூறியிருப்பதாவது:

40 Lok Sabha seats Give fruit of success. MK Stalin statement

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். மார்ச் 1ஆம் நாள் தி.மு.கழகத்தின் சார்பில் இளைஞர் எழுச்சி நாளாகத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அது, உங்களில் ஒருவனான என்னுடைய பிறந்தநாள். உங்கள் பேரன்பு மிகுந்த ஆதரவுடன் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வரும் என் முதல் பிறந்தநாள் இது.

எப்போதும் என் பிறந்தநாள் என்பது நம் உள்ளம் நிறைந்த-உயிரில் கலந்த-உணர்வெல்லாம் நிரம்பி நம்மை எப்போதும் இயக்கிக்கொண்டே இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடன்தான் தொடங்கும். கோபாலபுரம் இல்லத்தில் தந்தையின் முன் தனயனாக, தலைவரின் முன் பணிவு நிறைந்த தொண்டனாக நின்றிடுவேன்.

40 Lok Sabha seats Give fruit of success. MK Stalin statement

என்னை ஈன்றெடுத்த அன்னை தயாளு அம்மையார் அருகிருக்க, என் வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளும் சூழ்ந்திருக்க, உறவுகள், உடன்பிறப்புகள் குழுமியிருக்க தலைவர் கலைஞர் அவர்கள் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை உச்சி மோந்து முத்தமிட்டு உவகை பொங்க வழங்குவார். அந்த அன்பும் அரவணைப்பும் கலந்த வாழ்த்து தரும் தெம்பு என்பது அடுத்து வரும் மார்ச் 1ந் தேதி வரை நீடிக்கும். மக்கள் பணியிலும், கட்சிப் பணியிலும்,உள்ளத்தில் எந்த நேரத்திலும் எதற்காகவும் சோர்வு வராமல் தடுத்து, ஓய்வின்றி உழைத்திடுவதற்கான ஊக்கமும் உற்சாகமும் அளித்திடும் உன்னத சக்தியாகத் தலைவர் கலைஞரின் வாழ்த்துகள் அமைந்திடும்.

80 ஆண்டுகளைக் கடந்த தலைவர் கலைஞரின் போற்றுதலுக்குரிய பொதுவாழ்வில் அவர் சந்திக்காத எதிர்ப்புகள் இல்லை, பார்க்காத துரோகங்கள் இல்லை, பழித்தூற்றல்களுக்கும் பஞ்சமில்லை. அதனையெல்லாம் கடந்து, தன் அயராத உழைப்பால், அரசியல் வியூகங்களால், மாற்றாரும் வியந்து போற்றுகின்ற மதிநுட்பத்தால் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமின்றி, இந்தியாவின் இணையிலாத் தலைவராக விளங்கியவர் நம் இதயத் தலைவர் கலைஞர். அவரிடம் பெறுகின்ற வாழ்த்து என்பது அவரது ஆற்றலின் ஒருசிறு துளியைப் பெறுவதைப் போன்ற உணர்வைத் தரும்.

இயற்கையின் சதியால் இப்போது தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லை. அவரிடம் நேரில் சென்று வாழ்த்துப் பெறுகின்ற வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. என் பிறந்தநாளில் தலைவர் கலைஞர் எனும் உதயசூரியனின் தகத்தகாய ஒளிர்முகம் காண முடியாத நிலையில் இருக்கிறேன். அப்பா என்று வாய்நிரம்ப அழைக்க முடியாத மகனாக, தலைவரே என்று உணர்வை வெளிப்படுத்த இயலாத தொண்டனாக இந்த ஆண்டு எனக்கு அமைந்துவிட்டது. அதனால்தான், பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு ஓரிரு நாட்களுக்கு முன் கழகத்தினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.

40 Lok Sabha seats Give fruit of success. MK Stalin statement

"கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், உங்களின் பிறந்தநாளைக் கொண்டாட எங்களுக்கு ஆசையிருக்காதா, ஆர்வம் பெருகாதா?" என அன்பு பெருக பல நிர்வாகிகளும் கேட்டனர். அந்த ஆசையையும் ஆர்வத்தையும் உங்களில் ஒருவனான நான் அறிவேன். தலைவர் கலைஞர் அவர்களும்கூட எத்தனையோ முறை தன்னுடைய பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடவேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறார். அப்போதெல்லாம் அவருடைய பிறந்தநாளை வழக்கம்போலக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உங்களில் ஒருவனான எனக்கும் ஏற்பட்டது உண்டு. கோபாலபுரம் தொடங்கி குக்கிராமங்கள் வரை உள்ள அனைத்து உடன்பிறப்புகளின் எண்ணமும் அப்படித்தான் இருக்கும். அதனால்தான் தி.மு.கழகம் என்பது கொள்கை உறவு குவிந்திருக்கும்- குடும்பப்பாச உணர்வு நிறைந்திருக்கும் இயக்கமாக வளர்ந்திருக்கிறது.

உங்களின் உணர்வை பெரிதும் மதிக்கிறேன்; தலைவணங்குகிறேன். அதேவேளையில், உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோளை நீங்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவிரும்புகிறேன். பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவதைத் தவிர்த்திடுங்கள். பேனர்கள் வைக்காதீர்கள். ஆடம்பர விழாக்கள் அவசியமில்லை. மாணவர்களின் பொதுத்தேர்வு நேரம் என்பதால், ஒலிபெருக்கிகள் கட்டாயம் கூடாது. அவற்றிற்குப் பதிலாக, எப்படி ஊராட்சிகள்தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கிறதோ அதுபோல 'இளைஞர் எழுச்சி நாள் விழா' நடத்தப்படும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எங்கெங்கும் கறுப்பு-சிவப்புக் கொடி பறக்கட்டும். அமைதியான-ஆர்ப்பாட்டமில்லாத வகையில் இயன்றவரை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை அளித்திடுங்கள். ஏற்கனவே மாலைகள்- சால்வைகளுக்குப் பதில் புத்தகங்களைப் பரிசாக அளிக்க வலியுறுத்தியிருந்தேன். எனவே மாணவர்களுக்கும் பள்ளி நூலகங்களுக்கும் நல்ல புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள்.

40 Lok Sabha seats Give fruit of success. MK Stalin statement

ஒருநாள் கொண்டாட்டமல்ல நம்முடைய இலக்கு. ஒரு தலைமுறைக்குப் பயனளித்து வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் நம் கழகத்தினர் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்வும்! எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையை இருள் கவ்வும் வகையில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து கிடக்கிறது. மாநிலமோ கடன் சுமையில் தள்ளாடுகிறது. தொழில்வாய்ப்புகள் துவண்டுவிட்டன.முதலீடுகள் சுருங்கிவிட்டன.வேளாண்மை-சிறுதொழில்கள்-தொழிற்சாலைகள் அனைத்தையும் பா.ஜ.க.வும் அதன் மிரட்டலில் கட்டாயக் கூட்டணி அமைத்திருக்கிற அ.தி.மு.க.வும் தங்கள் ஆட்சியில் சீரழித்துவிட்டன. இளைஞர்கள்-மாணவர்கள்-பெண்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்காலமும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன. மக்களை மறந்த இத்தகைய மோசமான ஆட்சியாளர்களை இந்தியாவும் தமிழ்நாடும் இதுவரை சந்தித்தது இல்லை.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் மொழி-பண்பாடு-உணவுப்பழக்கம் உள்ளிட்ட அனைத்தும் சிதைக்கப்படுகின்றன. தன்னிச்சையான அரசு நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக்கப்படுகின்றன. உள்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வக்கில்லாத ஆட்சியாளர்கள், அர்ப்பணிப்பு மிக்க ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களை அரசியலாக்கி தேர்தல் களத்தில் லாபம் பெற முடியுமா என சூழ்ச்சிக்கணக்குப் போடுகிறார்கள். எத்தனை தகிடுதத்தங்கள் செய்தாலும் ஜனநாயகப் போர்க்களமான தேர்தல் களத்தில் தீர்ப்பளிக்கப்போகும் பொதுமக்கள் இந்த ஆட்சியாளர்களை இனி எந்நாளும் நம்பப் போவதில்லை.

தமிழ்நாடு மிகத் தெளிவான முடிவுடன் தருணம் எப்போது வரும் என்று காத்திருக்கிறது. அது தரப்போகும் தேர்தல் தீர்ப்புதான் இமயம்வரை எதிரொலிக்கப் போகிறது. எதேச்சதிகாரத்தை வீழ்த்திட-பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டை மீட்டிட- நாற்பது தொகுதிகளிலும் தி.மு.கழகக் கூட்டணி வெற்றி பெற்றிட கழகத்தினர் அயராது உழைத்திட வேண்டும். ஆட்சியாளர்களின் அதிகார மீறல்களைத் தகர்த்தெறிந்து, மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியை உறுதி செய்திடும் வகையில் கழகத்தினர் செயலாற்ற வேண்டும்.

40 Lok Sabha seats Give fruit of success. MK Stalin statement

எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்பார்கள். அதுபோல, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் தயவில் காலம் தள்ளுகிற மாநில ஆட்சியாளர்களும் அவர்களாகவே வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும், 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளால் மாநில ஆட்சியும் மாற்றம் காணும். மக்கள் விரும்புகிற அந்த மாற்றத்தை உருவாக்கித் தரவேண்டிய பெரும் பொறுப்பு கழகத்தோழர்களின் கைகளில் இருக்கிறது.

ஓயாத உழைப்பும் தளராத உறுதியும் கொண்ட அந்தக் கரங்களால் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளைப் பறித்துத் தாருங்கள். அதுவே உங்களில் ஒருவனான எனக்கு நீங்கள் தருகிற ஒப்பற்ற- விலைமதிப்பில்லா பிறந்தநாள் பரிசாக அமையும். நீங்கள் தரப்போகும் அந்தப் பரிசை, பேரறிஞர் அண்ணா நிரந்தரமாகத் துயிலுமிடத்தில்,நித்திரை கொண்டிருக்கும் அவரது அன்புத் தம்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் காலடியில் காணிக்கையாக்கிடுவேன்!

அந்தப் பரிசு கிடைக்கும்வரை, நானும் ஓடி ஓடி உழைத்திடுவேன்; கண்விழித்துக் காத்திருப்பேன்!

English summary
MK Stalin statement: Give 40 Lok Sabha seats success For Save the country, rehabilitation of our people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X