5 விக்கெட் அதிமுகவுக்கு? தவெகவுக்கு தாவுகிறார்களா சங்கரன்கோவில் கோயிலில் ரகசிய மீட்டிங்கா?
சென்னை: அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்.. அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும், அதிமுகவில் இருந்து 15 பேர் வரப்போவதாக செங்கோட்டையன் கூறி வருவது அரசியல் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு சந்திப்பு இப்போது கவனம் பெற்றுள்ளது.. அது என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

அதிமுக எம்எல்ஏக்கள்
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜய் வழங்கியிருப்பது அதிமுகவினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர், பெண்கள் என பலரும் தவெகவில் இணைந்துள்ளனர். தென்மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் இணைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
செங்கோட்டையன் சொன்ன 15 பேர்
இதனிடையே, அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வரப்போவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இப்படி கட்சியினர் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அவர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் அதிமுக தலைமை உள்ளது.... தவெகவுக்கு சென்றவர்களை மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வருவதுடன், கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்லாமல் தடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது
எடப்பாடி பழனிசாமி மறுப்பு
அதேசமயம், தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்ற பேச்சுகளையும் அதிமுக தலைமை மறுத்து வருகிறது. தவெகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்..
இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான் சங்கரன்கோவிலில் இன்று நடந்த ஒரு நிகழ்வு இப்போது கவனம் பெற்றுள்ளது... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி திருக்கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் தவெகவுக்கு மாறி வரும் நிலையில், ஒரே நேரத்தில் 5 அதிமுக எம்.எல்.ஏக்கள் கோயிலுக்கு சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சங்கரன்கோவில் கோயில்
இவர்கள் அனைவரும் ஏதாவது அரசியல் ஆலோசனை நடத்துவதற்காக சந்தித்தார்களா? தவெகவில் இணையப்போவதாக வெளியாகி வரும் தகவல்களின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன... இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அந்த 5 எம்.எல்.ஏக்களும், நட்பு ரீதியாகவே கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சங்கரன்கோவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திலிபன் ஜெய்சங்கர், இந்த சந்திப்பின் பின்னணி குறித்தும், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
அதில்,, "சங்கரன்கோவில் சங்கரநாரயணர்சாமி திருக்கோவில் பெருமையை அறிய வேண்டும் என்பதற்காக என்னுடைய சக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து வைத்தேன். தென்காசி என்றால் குற்றாலம், அடுத்து சங்கரநாரயணர்சாமி கோவில், ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து கோவிலின் பெருமைகளை எடுத்துரைத்தேன்...
திலீபன் ஜெய்சங்கர்
ஆனால், இதனை கொச்சைப்படுத்தும் வகையில் ரகசிய ஆலோசனை என்கிறார்கள். இது தொடர்பாக தவறான தகவல்களை சோஷியல் மீடியாவில் பரவி வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.. நான் எடப்பாடி தலைமையிலான அதிமுக கட்சியில்தான் தொடர்ந்து பயணித்து வருகிறேன்
தவெகவுக்கு போறாங்க, அதிருப்தி எம்எல்ஏக்கள், என்றெல்லாம் பொய் பிரச்சாரங்களை சிலர் தூண்டுதலின் பேரில் செய்கிறார்கள்.. பணம் வாங்கி கொண்டு சில யூடியூபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.... நாங்கள் இதனை மறுக்கிறோம்,.. கழகம் அறிவிக்கிற அனைத்து பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறேன், தவெக அரசின் குற்றசாட்டுகளை தொடர்ந்து முன் வைக்கிறேன்.
அதிமுகவில் பரபரப்பு
என்னுடைய குறைகள் இருந்தால் உடனே சரி செய்து கொள்கிறோம், பொய் பிரச்சாரங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.. அதிமுக கட்சியில் தொடர்ந்து பயணித்து வருகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்...
என்னை விமர்சிப்பது என்ற பெயரில், என்னுடன் வருகிற சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து விமர்சிப்பது கண்டிக்கதக்கது" என்று சங்கரன்கோவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திலிபன் ஜெய்சங்கர் விளக்கம் தந்துள்ளார்.
ஆக, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் தவெகவுக்கு மாறி வரும் சூழலில், 5 எம்.எல்.ஏக்களின் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், தாங்கள் அதிமுகவில்தான் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் திலிபன் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்..!!




Click it and Unblock the Notifications
