5 வருடத்தில் 5 லட்சம் பேருக்கு வேலை நிச்சயம்; 100 மில்லியன் லட்சியம்! நிஜமாகும் டாடாவின் கனவு
சென்னை: டாடா குழுமத்தின் தலைவரான சந்திரசேகரன் தங்களின் நிறுவனம் 100 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த 9 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் திடீரென்று காலமானார். நாட்டின் மிகப்பெரிய அளவுக்கு செல்வந்தராக அவர் இருந்தபோதும் பணக்காரர்கள் பட்டியலில் ஒருமுறைகூட அவர் இடம்பிடித்தது இல்லை. அதற்கு எதிரான மனநிலையிலிருந்தால். பணத்தைப் பெருக்குவதைவிட, நிறைய வேலைவாய்ப்புகளைப் பெருக்கி பலருக்கும் வேலை தரவேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. தனது வருமானத்தைக் கிட்டத்தட்ட 70% அவர் அறக்கட்டளை மூலம் மக்கள் சேவைக்குப் பயன்படுத்தினார்.

வீட்டுப் பிராணிகள் மீதும் அளவுகடந்த அன்பு வைத்திருந்த ரத்தன் டாடா, மும்பையில் மிருகங்களுக்காக மல்டி ஃபெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். புற்றுநோயாளிகளுக்காக மருத்துவ சேவைகளைச் செய்து வந்தார். ஆகவே அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கவேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. வேறு எந்த இந்தியப் பணக்காரருக்கும் இல்லாத அளவு ஏழை எளிய மக்களைக்கூட இவரது மறைவு பாதித்துள்ளது.
அவருக்குப் பின்பும் ரத்தன் டாடா செய்து வந்த அறக்கட்டளை சேவைகள் தொடரும் என்று டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள நோயல் டாடா தெரிவித்துள்ளார். பல வகையான நிறுவனங்கள், வகை வகையான தயாரிப்புகள் என தொட்டது எல்லாம் பொன்னாக மாறும் கலையைக் கற்று வைத்திருந்தவர் ரத்தன் டாடா. பணக்காரர் என்பதைவிட மக்கள் சேவகர் என்றே அவரைப் பலரும் அறிந்துவைத்திருந்தனர்.
அவரது கனவை டாடா நிறுவனம் இப்போது நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. 5 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் சுமார் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று டாடா குழுமம் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். இதுவே டாடாவுக்கு செய்யும் தரமான அஞ்சலி என்று சமூக ஊடகங்களில் வாழ்த்தி வரவேற்றுப் பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
அதாவது செமிகண்டக்டர்கள், மின்சார வாகனம் தயாரிப்பு தொழில்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் 5 லட்சம் பேருக்கு புதியதாக வேலை வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தர மேலாண்மைக்கான இந்திய அறக்கட்டளை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இவர் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் புதியதாக 5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைய இருக்கிறார்கள்.

சந்திரசேகரன் பேசுகையில், "உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்காமல், இந்தியா தனது லட்சியமான 'வளர்ச்சியடைந்த இந்தியா' (விக்சித் பாரத்) அடையாது. ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு மில்லியன் பேர் இந்தியாவில் தொழில்துறைக்குள் புதியதாக நுழைகிறார்கள். இது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுவதுடன் உற்பத்தித்துறையில் வேலை வாய்ப்புகளைப் பெருக்குகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "உதிரிப் பாகங்கள் தயாரிப்பது, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பது, அசெம்பிளிங் செய்வது போன்ற தொடர்புடைய துறைகளில் டாடாவின் முதலீடு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் 5 லட்சம் பேருக்கு தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார். அசாமில் டாடா குழுமத்தின் செமிகண்டக்டர் ஆலை ஒன்று வர இருக்கிறது.
அத்துடன் மின் வாகனங்கள், அதற்கான பேட்டரிகள், உதிரிப் பாக உற்பத்தி என பல சிறு குறு தொழில் நிறுவனங்கள் இங்கே சார்ந்து செயல்பட உள்ளன. ஆகவே, இதில் முதலீடு பல வகைகளில் அதிகரிக்கும். அவர் குறிப்பிடுவதைப் போல வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதனை வைத்தே டாடா குழுமத்தின் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார். இந்தியாவில் நிலவி வரும் விலைவாசி ஏற்றத்தால் பல இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாக சில புள்ளிவிவரங்கள் முன்பே சிகப்பு விளக்கைப் போட்டுச் சுட்டிக்காட்டி வந்த நிலையில், டாடா குழுமத்தின் இந்த அறிவிப்பு பல சிறு குறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது. இதைத்தான் சந்திரசேகரன் மற்றும் ஒரு சிறப்புச் செய்தியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது டாடா குழுமம் 100 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
2023 நிதியாண்டின் தரவுகளின்படி இந்திய உற்பத்தித்துறை வேலைவாய்ப்புகள் 7.4% உயர்ந்துள்ளது. 1.3 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 2022 நிதியாண்டில் 1.1 மில்லியனாக இருந்தது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, தேசிய புள்ளியியல் அமைப்பின் (NSO) தரவுகளின்படி, இந்தத் துறையின் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) வலுவான செயல்பாட்டால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 7.3% அதிகரித்து தற்போதைய விலையில் ரூ.21.97 டிரில்லியன் ஆக உள்ளது.
மொத்த தொழில்துறை உற்பத்தி 21.5% உயர்ந்து, 2023 நிதியாண்டில் ரூ.144.86 டிரில்லியனை எட்டி இருந்தது. உற்பத்தியிலிருந்து ஜிவிஏ பங்களிப்புகளில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் இடம்பிடித்துள்ளன. இந்த 5 மாநிலங்களும் சேர்ந்து நாட்டின் மொத்த உற்பத்தி ஜிவிஏவில் 54.5 சதவீதத்தைக் கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications