ஆந்திராவுக்குப் போன ₹7,000 கோடி ஹையர் மெகா ஆலை! அமைச்சர் கீர்த்தனாவுக்கு அடுத்த சொதப்பல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு அடுத்தடுத்து தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. தமிழகத்தை அடையாளமாகக் கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஆலையை ஆந்திராவுக்கும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரம்மாண்ட தலைமை அலுவலகப் பணிகளை பெங்களூருவுக்கும் கொண்டு சென்ற அதிர்ச்சி இன்னும் ஓயவில்லை. அதற்குள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான 'ஹையர் இந்தியா' (Haier India), தனது ₹7,000 கோடி பிரம்மாண்ட உற்பத்தி ஆலையை ஆந்திராவில் அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்த ஆலை அமையவிருக்கும் இடம் தமிழ்நாட்டின் சென்னை எல்லையிலிருந்து வெறும் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியவேடு பகுதி. சென்னை துறைமுகங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தின் போக்குவரத்து வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த மெகா முதலீடு, தமிழ்நாட்டுக்கு வராமல் ஆந்திராவுக்குச் சென்றிருப்பது தவெக அரசின் இளம் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் நிர்வாகத் திறன் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

tvk

21,000 புதிய வேலைகள்: கைநழுவிப் போன பொன்னான வாய்ப்பு!

இந்தியாவில் ஏற்கனவே மகாராஷ்டிராவின் புனே மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ள ஹையர் நிறுவனம், தென்னிந்திய சந்தையைக் குறிவைத்து தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீட்டுடன் களம் இறங்குகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சத்தியவேடு மண்டலத்தில் இதற்காக 250 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

முதலீடு: மொத்தம் ₹7,000 கோடி.

முதல் கட்டம்: ₹4,500 கோடி முதலீட்டில் வரும் 2028-க்குள் உற்பத்தி தொடங்கப்படும்.

இரண்டாம் கட்டம்: 2032-க்குள் கூடுதலாக ₹2,500 கோடி முதலீடு செய்யப்படும்.

உற்பத்திப் பொருட்கள்: ஏர் கண்டிஷனர்கள் (AC), வாஷிங் மெஷின்கள், தொலைக்காட்சிகள் (TV), ஏர் ப்யூரிஃபையர்கள் மற்றும் சமையலறை சாதனங்கள்.

வேலைவாய்ப்புகள்: இந்த ஆலையில் நேரடியாக 6,000 பேருக்கும், உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் துணைப் பணிகள் மூலம் மறைமுகமாக 15,000 பேருக்கும் என மொத்தம் 21,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளித்திருக்க வேண்டிய இந்த 21,000 வேலைவாய்ப்புகள், இப்போது ஒரே கையெழுத்தில் ஆந்திர இளைஞர்களுக்குச் சென்றுவிட்டன.

சென்னை உட்கட்டமைப்பு பயன்பாடு ஆந்திராவுக்கு; தமிழ்நாட்டுக்கு என்ன மிச்சம்?

இந்தத் தொழிற்சாலை அமையும் சத்தியவேடு பகுதி, தேசிய நெடுஞ்சாலை 16-ல் (NH 16) சென்னையிலிருந்து வெறும் 55 கி.மீ தூரத்தில்தான் உள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய மூன்று முக்கிய தமிழக துறைமுகங்கள்தான் பயன்படுத்தப்பட உள்ளன. கிருஷ்ணாபட்டினம் துறைமுகமும், சென்னை மற்றும் திருப்பதி விமான நிலையங்களும் இந்த ஆலைக்கு மிக அருகில் உள்ளன.

அதாவது, மூலப்பொருட்கள் கொண்டு செல்வது முதல் ஏற்றுமதி வரை தமிழகத்தின் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அனைத்து உள்கட்டமைப்புகளையும் இந்நிறுவனம் பயன்படுத்தும். ஆனால், தொழிற்சாலையிலிருந்து கிடைக்கக்கூடிய வரி வருவாயும், பல்லாயிரக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகளும் அண்டை மாநிலமான ஆந்திராவுக்குச் சென்று சேரும். சென்னை வாசலில் நின்ற இந்த மெகா திட்டத்தைத் தமிழக அரசு முன்கூட்டியே பேசி, திருவள்ளூர் அல்லது ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலேயே நிலம் ஒதுக்கி ஏன் தக்கவைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஸ்ரீசிட்டி வளர்ச்சிக்கு முன்னால் தடுமாறும் தமிழ்நாடு

ஆந்திராவின் எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி தொழில் பூங்கா சுமார் 7,500 ஏக்கர் பரப்பளவில் 30 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்து அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஃபாக்ஸ்கான், பேனாசோனிக் மற்றும் ஃப்ளெக்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே அங்கு இயங்கி வருகின்றன. டைக்கின், ப்ளூ ஸ்டார, ஹேவல்ஸ், ஆம்பர் போன்ற நிறுவனங்கள் ஸ்ரீசிட்டியை நாட்டின் ஏசி தயாரிப்புத் தலைநகரமாகவே மாற்றிவிட்டன.

இதற்குப் போட்டியாக எல்ஜி நிறுவனம் 247 ஏக்கரில் தனது மூன்றாவது ஆலையை அமைத்து வருகிறது. திருப்பதியில் உள்ள அரசு தொழில் மண்டலங்களில் டிக்சன், டிசிஎல் போன்ற முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. திருப்பதி - சென்னை - நெல்லூர் தொழில் வழித்தடம் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறி வரும் சூழலில், சென்னை எல்லைக்கு அருகே வரும் நிறுவனங்கள் அனைத்தும் ஆந்திரப் பக்கமே செல்வது தமிழ்நாட்டுக்குத் தொடர் சவாலாக மாறியுள்ளது.

அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடுகள் மீது குவியும் விமர்சனங்கள்

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றதும், இளம் வயதிலேயே தொழில்துறை அமைச்சராக எஸ். கீர்த்தனா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தொழில்துறையில் நிகழ்ந்துள்ள சறுக்கல்கள் சாதாரண மக்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளன:

1. ராயல் என்ஃபீல்டு வெளியேற்றம்: தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்த ராயல் என்ஃபீல்டு தனது ₹2,200 கோடி புதிய ஆலையை ஆந்திராவுக்குக் கொண்டு சென்றது.

2. டிவிஎஸ் மோட்டார்ஸ் முடிவு: சென்னையில் வேரூன்றிய டிவிஎஸ் மோட்டார்ஸ் தனது 5.29 லட்சம் சதுர அடி பிரம்மாண்ட தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அலுவலகத்தை பெங்களூருவில் அமைத்தது.

3. தற்போது ஹையர் இழப்பு: ₹7,000 கோடி முதலீடும் 21,000 வேலைவாய்ப்புகளும் எல்லை வரை வந்து கைநழுவிப் போயுள்ளன.

ஆந்திர அரசு முதலீட்டாளர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிலம், தடையற்ற மின்சாரம், விரைவான அனுமதி, வரிச் சலுகைகள் ஆகியவற்றை வாரி வழங்கி ஈர்க்கிறது. ஆனால், தமிழக அரசிடம் புதிய நிறுவனங்களை உடனுக்குடன் அணுகி தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரும் ஆக்ரோஷமான தொழில் உத்தி காணப்படவில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெறும் மேடைப் பேச்சுகளுடனும் பழைய பெருமைகளுடனும் நின்றுவிடாமல், அமைச்சர் கீர்த்தனா உடனடியாகச் சுதாரித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு வரத் திட்டமிடும் நிறுவனங்களை ஆரம்பக் கட்டத்திலேயே அணுகி, தேவையான வசதிகளை உடனுக்குடன் வழங்கி திட்டங்களைத் தமிழ்நாட்டிலேயே நிறுவ வேண்டும். இல்லையெனில், தமிழகத்தின் படித்த இளைஞர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் அவல நிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+