"24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள்".. தவெக அரசு மீது கனிமொழி தாக்கு!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?" என திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலைகள், வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த கொலைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்துள்ளார் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate-ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
