2014-ல் ஜெ.வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா அதிரடி தீர்ப்பு அளித்த நாள் இன்று!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கும் அவரது கூட்டாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றது. கர்நாடகாவுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விசாரித்தார்.
இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார்.
நீதிபதி குன்ஹா மொத்தம் 1136 பக்கங்களுக்குத் தீர்ப்பு எழுதினார். இத்தீர்ப்பில் முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவற்றை தனித்தனித் தலைப்புகளில் எழுதினார். 895-வது பக்கத்தில் தொடங்கி 907-வது பக்கம் வரை நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும், 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனை விவரங்களும் இடம்பெற்றிருந்தன.
தப்பு இருக்கு! ஓபிஎஸ் எடுத்த கடைசி பிரம்மாஸ்திரம்.. 3 கோணங்கள்.. இதுமட்டும் நடந்தால் அதிமுகவே மாறும்

4 ஆண்டு சிறை தண்டனை
நீதிபதி குன்ஹா தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய பேருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு மட்டும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதி குன்ஹா தீர்ப்பின் எதிரொலி
4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோனது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் உடனடியாக ரத்தானது. ஊழல் தடுப்பு பிரிவில் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை விதித்தால் அவருக்கு எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த தண்டனை காலம் முடியும் வரையும், அதன் பிறகு 6 ஆண்டுகளும் தேர்தலில் நிற்க முடியாது. இதன்படி மொத்தம் 10 ஆண்டுகாலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது.

கதறி அழுத அதிமுக தொண்டர்கள்
இத்தீர்ப்பைக் கேட்டதும் அதிமுக தொண்டர்கள் குய்யோ முறையோ என கதறி அழுதனர். பல இடங்களில் வன்முறைகளில் இறங்கினர் அதிமுக தொண்டர்கள். உச்சமாக மண் சோறு சாப்பிட்டனர்; கோவில் தோறும் காவடி எடுத்து அழுது புரண்டனர் அதிமுக நிர்வாகிகள். ஆனாலும் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சிறைவாசம் அனுபவித்தனர்

நீதிபதி குமாரசாமியின் சர்ச்சை தீர்ப்பு
பின்னர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பெரும் நாடு பெரும் விவாதங்களையும் கடும் சர்ச்சையையும் கிளப்பியது. அத்தீர்ப்பில், கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரியின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, வருவாய்க்கு மீறி 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்யப்படலாம் என கூறியுள்ளது. ஆந்திரா அரசும் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என தெரிவித்துள்ளது. வருவாய்க்கு அதிகமான சொத்து 10%-க்கும் குறைவாக உள்ளதோடு அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டுதான் இருக்கிறது என்றெல்லாம் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்து ஜெ.வை விடுதலை செய்தார்.

உறுதி செய்த உச்சநீதிமன்றம்
ஆனால் நீதிபதி குமாரசாமி தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த போது நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் அப்போது ஜெயலலிதா மறைந்து சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் நீதிபதி குன்ஹா தீர்ப்பின் படி 4 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தே விடுதலையாகினர்.