மக்களின் கவலையை போக்கும் அரசு.. கனவுகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது - முதல்வர் பெருமிதம்
மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் கவலையைப் போக்கும் அரசாக, மக்களுடைய கனவுகளை நிறைவேற்றுகிற அரசாக திமுக அரசு உள்ளது.
சென்னை: மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் கவலையைப் போக்கும் அரசாக, மக்களுடைய கனவுகளை நிறைவேற்றுகிற அரசாக திமுக அரசு உள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் காவல் அரண் என்றால் அது திமுக தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைத்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையிலேயே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து ஆராஞ்சி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்வருக்கு வரவேற்பு
மாலையில், அருணை நகரில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவுவாயில் மற்றும் கருணாநிதி சிலையை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது, அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரதநாட்டியம், மேளதாளங்கள் மற்றும் தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

சிவாச்சாரியார்களுடன் உரையாடல்
முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்காக சாலையோரம் மாற்றுத்திறனாளிகள் திரண்டு இருந்ததை கண்டு, ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து அவர்களுடன் உரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்பு திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பணியாற்றும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தினர் உடன், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கருணாநிதி சிலை
அதைதொடர்ந்து, அருணை நகரில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவுவாயில் மற்றும் கருணாநிதி சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் காவல் அரண் என்றால் அது திமுக தான் என குறிப்பிட்டார்.

மக்கள் நலன் காக்கும் அரசு
மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் கவலையைப் போக்கும் அரசாக, மக்களுடைய கனவுகளை நிறைவேற்றுகிற அரசாக திமுக அரசு உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தை திருவண்ணாமலையில்தான் தொடங்கினேன். மறந்திருக்க மாட்டீர்கள். அதன் பிறகு தொகுதி தொகுதியாகச் சென்று தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கைகளை மனுக்களை பெற்றேன். உங்களுடைய கவலைகளை, உங்களை கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை என்னிடம் நீங்கள் ஒப்படைத்து இருக்கிறீர்கள்.

என்னுடைய கவலை
இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். திமுகவின் ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று சொன்னேன், ஸ்டாலினிடம் மனுவைக் கொடுத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு கோரிக்கை மனுக்களை இலட்சக்கணக்கான மக்கள் கொடுத்தார்கள். திமுக வெற்றி வாகை சூடுவதற்கு இவை அடித்தளம் வகுத்தது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணம் காரணமாக தமிழக முழுவதும் திமுக வெற்றி பெற்றது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications