ஆனந்த் அண்ணனை நாளைக்கு கவனிச்சுக்கோங்க! பாமக எம்எல்ஏவிடம் ஆதவ் அர்ஜுனா சொன்னதால் அவையில் சிரிப்பலை!
சென்னை: தமிழக சட்டசபையில் பொதுப் பணித் துறை மானியக் கோரிக்கையின் போது பாமக எம்எல்ஏ சிவக்குமாருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டசபைில் கடந்த 5 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பொது விவாதம் நடந்தது.

இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை நேற்று கூடியது. அப்போது சுகாதாரத் துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.
அது போல் இன்று பொதுப் பணித் துறை, விளையாட்டு, இளைஞர் நலன், மனிதவளம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
அப்போது விக்கிரவாண்டி தொகுதியின் பாமக எம்எல்ஏ சிவகுமார் பேசுகையில் 1952 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி எம்எல்ஏவாக கோவிந்தசாமி இருக்கும் போது நந்தன் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தார்.
கிட்டதட்ட 65, 70 ஆண்டுகளாக நந்தன் கால்வாய் திட்டத்தை பல்வேறு அரசியல் கட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளும், ஏரி பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஃபெங்கால் புயலால் பாதிப்படைந்த ஏரிகளை சீர் செய்ய வேண்டும் என சிவகுமார் பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிரித்தபடியே எழுந்தார்.
நீர் வளத் துறை மானியக் கோரிக்கை நாளைக்குத்தான். எனவே ஆனந்த் அண்ணனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வு குறித்தும் நிறைய எம்எல்ஏக்கள் பேசியிருக்கிறார்கள்.
பொதுப் பணித் துறை, இளைஞர் நலன் குறித்து ஏதாவது சொன்னால் நான் விளக்க உரைக்கு உதவியாக இருக்கும். அண்ணனை நாளைக்கு கவனிச்சிக்கோங்க என ஆதவ் சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
அவர் மேலும் தொடர்கையில், அன்புமணி அண்ணனுக்கு 3 வயது இருக்கும் போது இந்த நந்தன் கால்வாய் குறித்து பேச்சு எழுந்ததாம். இன்று அவருக்கு 57 வயதாகிறது. நாளைதான் நீர் வளத் துறை மானிய கோரிக்கை என்றாலும் இன்றே சொல்லிவைத்துவிடலாம் என்றுதான் சொன்னேன்.
விக்கிரவாண்டியை தனி கோட்டாட்சியாக பிரித்து வானூர், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியை சேர்த்து தனி கோட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும்.
விக்கிரவாண்டியில் துணை காவல் கண்காணிப்பாளர் கட்டடம் கட்டித் தரப்பட வேண்டும். விக்கிரவாண்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சிங்கப்பெண் காவல் நிலையம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
போக்குவரத்து கட்டடம் கட்டித் தரப்பட வேண்டும். விக்கிரவாண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தரப்பட வேண்டும். விக்கிரவாண்டியில் தீயணைப்பு நிலையம் கட்டித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், நந்தன் கால்வாய் திட்டத்திற்கு கடந்த ஆட்சியிலேயே நிதி ஒதுக்கியாகிவிட்டது. உறுப்பினர் கடந்த ஆட்சியில் மயிலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்ததால் அவருக்கு இது தெரியாது என்றார். இதையடுத்து வெடுக்கென எழுந்த சி.வி.சண்முகம், நந்தன் கால்வாய் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அப்படியேதாந் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications
