குரு பூர்ணிமா..கலைகளை கற்றுத்தந்த குருவிற்கு நன்றி கூறும் நாள் - பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: குருபூர்ணிமா நாளன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கூறுகிறது. இன்றைய தினம் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையைப் பற்றி எமக்கு பலவற்றைக் கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் இது நன்றியைத் தெரிவிக்கும் நாள் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பூர்ண நிலையில் தன்னுள் இருக்கும் குரு (ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிகளுக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா". குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள் ஆகும்.
குருவின் பேராற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனது குருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் துவக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.

குரு பூர்ணிமா
"மாதா பிதா குரு தெய்வம்" என்பார்கள், இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம். குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகதத்துவம்.

குருவின் ஆசி
சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா. இந்த சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டு குருவின் துணையோடு யோகசாதனையை தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா. யோக பண்பாட்டில் இந்த திருநாள் ஆனந்தமான ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது.

வெற்றி தரும் நாள்
குருபூர்ணிமா அன்று செய்யும் பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல, பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள், ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.

வியாச பௌர்ணமி
வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி, கலைகள் கற்ற மாணவர்கள் இன்றைய தினம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள். பாரதம் சொன்ன வியாசர், ராமாயணம் எழுதிய வால்மீகி, உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம். இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம்.

குருவிற்கு நன்றி செலுத்துவோம்
எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞான செல்வத்தை அள்ளி தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு. தனது அக வாழ்விற்கு வழிகாட்டி தன்னையுணர வழிசெய்த அந்த தியாக தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்த கூடிய திருநாளே குருபூர்ணிமா.
குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில் குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞான செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோகரகசியம்.

பிரதமர் மோடி வாழ்த்து
குரு பூர்ணிமாவை முன்னிட்டு பலரும் வாழ்த்துச்செய்தியை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தனது வாழ்த்துச்செய்தியில் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையைப் பற்றி எமக்கு பலவற்றைக் கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் இது நன்றியைத் தெரிவிக்கும் நாள். நமது சமூகம் கற்றலுக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்.












Click it and Unblock the Notifications