சாதனை புரிய வயது எதற்கு...37 வயதில் சைக்கிளிங் சாம்பியனாக வலம் வரும் சென்னையின் சிங்கப்பெண் அபிராமி!
சென்னை: விளையாட்டாக சைக்கிளிங் செய்ய தொடங்கி இன்று சாதனையாளராக உருமாறிய நிற்கிறார் சென்னையை சேர்ந்த ஒரு சிங்கப் பெண் அபிராமி.
மாஸ்ட்டர்ஸ் ஜூட் சைக்கிள் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார்
அபிராமி. சென்னையியில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளும் வெற்றி வாகை சூடி நம்பர் ஒன் ஆக திகழ்கிறார்.

சென்னையில் ஒரு சிங்கப் பெண்
சைக்கிளிங் முன்பெல்லாம் வெளிநாடுகளில் மட்டுமே பிரபலம். ஆனால் இன்று இந்தியாவிலேயே சைக்கிளிங் மிகவும் பிரபலமாக மாறத் தொடங்கி விட்டது. தனிமை விரும்பிகள், இயற்கை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் சைக்கிளிங் மீது ஆர்வத்தை குவித்து வருகின்றனர். அந்த வகையில் விளையாட்டாக சைக்கிளிங் செய்ய தொடங்கி இன்று சாதனையாளராக உருமாறிய நிற்கிறார் ஒரு சிங்கப் பெண். நம்ம சிங்கார சென்னை அண்ணா நகரை சேர்ந்த அபிராமி தான் அந்த பெண். தனக்கு சைக்கிளிங் மீது ஈடுபாடு வந்தது குறித்து அபிராமியே பேசுகிறார் வாங்க கேட்போம்.

4-வது முறை சைக்கிளிங் சம்பியன்
''நான் எனது 32 வயதில் சைக்கிளிங் ஈடுபட ஆரம்பித்தேன். அப்போது பல்வேறு கேள்விகளும், கிண்டல்களும் என்னை துளைத்தெடுக்க ஆரம்பித்தது. இந்த வயசுல போய் ஏன் சைக்கிளிங் ஈடுபடுறீங்க? என பலரும் கேட்டனர். ஆனால் அந்த விமர்சனத்தை ஆயுதமாக கொண்டு இன்று 4-வது முறையாக தமிழ்நாடு சைக்கிளிங் சம்பியனாகி உள்ளேன். அனைத்து சைக்கிளிங் ரேஸிலும் நான் பங்கேற்றுள்ளேன். பெங்களூரு சைக்கிளிங் ரேஸில் வெற்றி பெற்று இருக்கிறேன். தேசிய அளவிலான சைக்கிளிங் ரேஸிலும் பங்கேற்றுள்ளேன்'' என்று பெருமையுடன் கூறுகிறார் அபிராமி.

அபிராமி
பொதுவாக சைக்கிளிங் செய்ய விரும்புபவர்கள் சுமார் 20, 22 வயது முதலே அதற்கான பயிற்சியை தொடங்குவார்கள். ஆனால் நம்ம சிங்கப்பெண் அபிராமியோ 2 குழந்தைகளுக்கு தாயான பிறகுதான் சைக்கிளிங் பயிற்சியை தொட்டுள்ளார். தனது விடாமுயர்சியால் 37 வயதில் 3 முறை தொடர்ந்து தமிழக சாம்பியனாகி நிற்கிறார் அபிராமி. சைக்கிளிங் ரேஸுக்கு பிட்னஸ் தேவை இருக்குமே என்று அபிராமியிடமே கேட்டோம். அதற்கு அவர், சைக்கிளிங் சிறு வயது முதலே ஈடுபட வேண்டிய அவசியமில்லை. ஒரு பிட்னஸ்-காக கூட சைக்கிளிங் ஈடுபடலாம். இதற்காக சைக்கிள் வாங்க கூட வேண்டிய அவசியமில்லை. வாடகை சைக்கிள் எடுத்தே நீங்கள் பயிற்சியை தொடங்கலாம் என்று கூறுகிறார்.

விபத்தில் சிக்கினார்
மாஸ்ட்டர்ஸ் ஜூட் சைக்கிள் ரேஸ் சாமீப்யன்ஷிப் போட்டியில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார் அபிராமி. சென்னையியில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளும் வெற்றி வாகை சூடி நம்பர் ஒன் ஆக திகழ்கிறார். ஆனால் இந்த நம்பர் ஒன் மகுடம் அபிராமிக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. சைக்கிளிங் ஆரம்பித்தபோது பெரும் விபத்து ஒன்றில் சிக்கி மீண்டு இருக்கிறார் அபிராமி. இது குறித்து அவர் சொல்வதேயே கேளுங்கள். சைக்கிளிங்கில் எனக்கும் பல சவால்கள் வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு விபத்து ஏற்பட்டது. வீட்டில் எல்லாரும் பயந்தார்கள். ஆனால் நான் காயத்தில் இருந்து தைரியத்துடன் மீண்டு தொடர்ந்து சைக்கிளிங் ஈடுபட்டு வருகிறேன்.

குடும்பம்தான் காரணம்
விளையாட்டாக தொடங்கிய பயணம் இன்று சிகரம் தொட்டு இருப்பதற்கு காரணம் தனது குடும்ப உறுப்பினர்களின் அன்பு என்று கூறுகிறார் அபிராமி. சைக்கிளிங் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு செய்ய போவதாக கூறியுள்ளார் இந்த சிங்கப் பெண். சிங்கப்பெண்ணே தொடரட்டும் உங்கள் சாதனைகள்.