Timeline: அதிமுக - பாஜக கூட்டணியில் இதுவரை நடந்தது என்ன? ஜெயலலிதா, எடப்பாடி எடுத்த அதிரடி முடிவுகள்!
சென்னை: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டி, கூட்டணி முறிந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பல்வேறு காலகட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. அதிமுக - பாஜக இடையே இத்தனை ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
முதன் முதலாக கூட்டணி: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் முதன்முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க 18 இடங்களையும் பா.ஜ.க 3 நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றியது. ஆனால், ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே பிரச்சனைகள் ஏற்பட்டன. முதலில் பாஜக அரசை வெளியில் இருந்து ஆதரிப்பதாகச் சொன்ன ஜெயலலிதா, பிறகு ஆட்சியில் பங்கேற்கச் சம்மதித்தார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ஜெயலலிதா.
ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதா: பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா. அந்த கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்தது. இதையடுத்து 1999ல் பாஜக தலைமையிலான அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றார் ஜெயலலிதா. இதையடுத்து, வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட்டணி அமைத்தது.
1999ல் சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடைபெற்ற முஸ்லீம்கள் வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது, "இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்திரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் பாஜக ஆட்சியை நானே கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ளாது எனத் தெரிவித்தார்.
2004ல் மீண்டும் தேர்தல் கூட்டணி: ஆனாலும், அதன் பிறகு 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தது அதிமுக. அந்த தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் போட்டியிட்டது. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது பாஜக - அதிமுக கூட்டணி. இதையடுத்து கூட்டணி உறவு உடனடியாக முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஜெயலலிதா மறைவு வரை பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. மோடியா லேடியா என்ற முழக்கத்துடன் ஜெயலலிதா தேர்தல் பரப்புரை செய்தார். அந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 37 இடங்களைக் கைப்பற்றியது அதிமுக. பாஜக 2 இடங்களில் மட்டுமே வென்றது. 2016 சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக தனித்துப் போட்டியிட்டது. இவ்வாறாக, 2004 தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா மறைவு வரை பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை.

எடப்பாடி அமைத்த கூட்டணி: ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதிமுக - பாரதிய ஜனதா இடையே கூட்டணி ஏற்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்த அதிமுக, பெரும்பான்மையை இழந்து சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதேசமயம், 20 ஆண்டுகள் கழித்து பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.
முறிவும் இணைவும்: அதைத்தொடர்ந்து நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு, தனித்தனியாகப் போட்டியிட்டன. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக நீடித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அப்போது தெரிவித்திருந்தார்.
ஆனாலும், தொடர்ச்சியாக பல்வேறு தருணங்களில் அதிமுக - பாஜக இடையே மோதல் போக்குகள் நிலவி வந்தன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை விமர்சித்தது அதிமுக தலைவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அண்ணாமலை உருவபொம்மையை அதிமுகவினர் கொளுத்தியதும், எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை பாஜகவினர் கொளுத்தியதும் நடந்தேறியது.
மீண்டும் முறிந்த கூட்டணி: கூட்டணியில் இருந்த பாஜகவில் இருந்தே பல முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சென்றனர். இதுவும் இரு கட்சிகளுக்கும் இடையே பிணக்கை அதிகரித்தது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்தே விலகுவேன் என பாஜக கட்சிக் கூட்டத்தில் பேசினார் அண்ணாமலை. எனினும், பாஜக தேசிய தலைவர்கள் தலையிட்டு, இந்த கூட்டணியை ஒட்ட வைத்தனர். இருந்தும், அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே விமர்சனங்கள், எதிர்வினைகள் என கூட்டணிக்கு இடையே ஒரு அமைதியற்ற சூழலே நிலவி வந்தது.
அண்ணாமலை அண்மையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கொந்தளித்தனர். அதற்கும் கடுமையாக பதில் அளித்திருந்தார் அண்ணாமலை. இந்தச் சூழலில் பாஜக கூட்டணியில் தாங்கள் இல்லை என்றும், அண்ணாமலையை இனி விட மாட்டோம் என்றும் அதிரடியாக முடிவெடுத்துள்ளது அதிமுக.
பின்னணி காரணம்: எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லிக்குச் சென்று பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக 20 சீட்களை கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எட்டியுள்ளது அதிமுக தலைமை. 1999ல் ஆட்சியைக் கவிழ்த்து கூட்டணியை முறித்தார் ஜெயலலிதா. இன்று சீட் பிரச்சனை + அண்ணாமலையின் பேச்சுகளால் அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.v












Click it and Unblock the Notifications