"அண்ணன் எடப்பாடியார்"னு சொன்ன வேலுமணி! இபிஎஸ் பேச்சை ஆமோதித்த சண்முகம்! அப்போ அதிமுக சண்டை?
சென்னை: "மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார்" என அழைத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சட்டசபையில் பேசியிருந்தார். இதனால் அதிருப்தியில் இருந்தவர், தற்போது உரிமையுடன் அழைத்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று 6 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அப்போது அவர் "மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார்" என குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அத்துடன் முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சியின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வந்ததும் தவெக ஆட்சி அமைந்த நிலையில் அதிமுகவில் எஸ்பி வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள், நம்பிக்கை கோரிய தீர்மானத்தில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, அவர்களது பதவிகளை பறித்துவிட்டு வேறு நபர்களை நியமித்தார். இதையடுத்து அந்த எம்எல்ஏக்களில் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.
எஸ்பி வேலுமணியும் எடப்பாடியை நோக்கி சென்றார். அங்கு அவருக்கு கட்சியில் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய பதவிகளை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கேட்டு வருகிறார்கள்.
அண்மையில் தவெக அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்த மாவட்டத்தில் போராட்டம் நடத்த ஒதுக்காமல் வேறு மாவட்டத்தில் ஒதுக்கியதால் அந்த போராட்டத்தை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வதநாதன் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். அது போல் சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்கக் கோரியும் இவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர்.
அதிமுகவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என சொல்லப்பட்டது. இதில் புஸ்ஸி ஆனந்தை எஸ்பி வேலுமணி சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டசபையில் கூட எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதில்லை. ஆனால் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வேலுமணி பேசியது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அது போல் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இன்றைய தினம் 6 துறைகளுக்கான மானியக் கோரிக்கை நடைபெறும் நிலையில் விளக்க குறிப்பேட்டை இரவு 8 மணிக்கு தந்தால், எல்லாவற்றையும் எப்படி படிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கிருந்த சி.வி.சண்முகம், அவர் சொல்வது சரிதான் என்பதை போல் தலையசைத்தார். எனவே ஒருங்கிணைந்த அதிமுகவுக்கான சமிக்ஞைகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் அதிமுகவில் ஒற்றுமையை நிலைநாட்ட எடப்பாடி தரப்பினர் அதிருப்தியாளர்களை சமாதானம் செய்தனரா இல்லை, அதிருப்தியாளர்களே தங்களை சமாதானம் செய்து கொண்டு எடப்பாடியை ஆதரித்து பேசினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் Unity is Strength ஒற்றுமையே பலம் என்பதை புரிந்து கொண்டது போல் தெரிகிறது. ஏற்கெனவே பேசிய போது எடப்பாடியார் பெயரை வேலுமணி குறிப்பிடவே இல்லை.
எஸ்பி வேலுமணி தனது சிக்னலை கொடுத்துவிட்டார். இதையடுத்து சி.வி.சண்முகம் பேசும் போது என்ன சொல்கிறார் என்பதை பார்த்தால்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். அதாவது ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்பு என கோரிவிட்டு வேலுமணியும் சண்முகமும் மற்றும் சிலரும் தனித்து செயல்பட்டு வருவதாக சொல்வத முரணாக உள்ளது என்பதை அவர்களே உணர்ந்தார்களா என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
