ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க வந்தது யார்? விஜய் அரசு பதில் சொல்லியே தீரணும்.. ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
சென்னை: தவெக அமைச்சர் ராஜ்மோகன் வெளிப்படையாகவே தன்னிடம் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறியுள்ளார் என்ற அதிமுகவின் ஜெயக்குமார், லஞ்சம் கொடுக்க முன்வந்தவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்காமல் அரசு அவரை காப்பாற்றுவதாக விமர்சித்துள்ளார். அந்த நபர் மீது விஜய் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக தவெக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் 'தமிழ்நாடு நாள்' விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வன்னி அரசு கலந்து கொண்டனர்.

ரூ.5 கோடி லஞ்சம்
அப்போது உலக தமிழர்கள் மாநாடு மீண்டும் நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார். மேலும், இயல், இசை, நாடகம் மன்றத் தலைவர் பதவிக்காக ஒருவர் ரூ.5 கொடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகவும் இருப்பினும் விஜய் அரசு நேர்மையான முறையில் அந்த பதவிக்கு புஷ்பவனம் குப்புசாமியை நியமித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன்
அவர் மேலும் பேசுகையில், "அரசு அமைந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன். இதற்கு முன்பு இதை யாரிடமும் நான் சொன்னதில்லை. தம்பி லயலாமணிக்கு மட்டும் தெரியும். அாவது இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியை தனக்கு தருமாறு ஒருவர் கேட்டார். இதற்காக 5 கோடி ரூபாய் தருவதாகவும் குறிப்பிட்டார்.
நான் லயோலா மணியிடம் சிரித்து கொண்டே ரூ.500 கோடி கொடுத்தாலும், பொருத்தமில்லாத ஒருவருக்கு நம்ம முதல்வர் பதவியை தர மாட்டார் பொருத்தமான புஷ்பவனம் குப்புசாமி அண்ணனுக்கு மட்டும்தான் இந்த பதவி.. ஒரு ரூபாய்கூட வாங்காமல் அந்த பதவியை புஷ்பவனம் கும்பசாமிக்கு தர தளபதி சொல்லியிருக்கிறார் என சொல்லி அனுப்பிட்டேன்" என கூறியிருந்தார்.
சர்ச்சை
அவரது இந்த பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பினர். அதேநேரம் அரசியல் அரங்கில் இது பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. அமைச்சர் ஒருவருக்கே நேரடியாக ஒருவர் லஞ்சம் தர முன்வருகிறார் என்றால் அப்போது அவரை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டாமா என்பதே எதிர்க்கட்சியினரின் கேள்வியாக உள்ளது.
இது தொடர்பாக அதிமுக மூத்த தலைவரும் மாஜி அமைச்சருமான ஜெயக்குமார், "லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்பதுதான் சட்டம். அமைச்சர் ராஜ்மோகன் என்ன சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரே வெளிப்படையாக ஒரு விஷயத்தை சொல்கிறார். லயோலா மணி மூலமாக ஒருவர் ரூ.5 கோடி லஞ்ச பணத்தை கொண்டு வந்தார் என்று சொல்கிறார். அதை நாங்களெல்லாம் பொருட்படுத்தவில்லை என்கிறார்.
கேள்வி
புஷ்பவனம் குப்புசாமிக்கு இயல், இசை, நாடகம் மன்ற தலைவர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். புஷ்பவனம் குப்புசாமியை பொறுத்தவரை அவர் தகுதியானவர்தான், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், லயோலா மணி அழைத்து வந்த அந்த நபர் யார்? ரூ.5 கோடி லஞ்ச பணத்தை கொடுக்க முன்வந்தது யார்? லஞ்சம் கொடுக்க முன்வந்த அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டாமா?
முதலமைச்சர் விஜய் உண்மையிலேயே நேர்மையான ஒரு முதலமைச்சராக இருந்தால், தனது அமைச்சரையும் பார்க்காமல், லயோலா மணி மூலமாக லஞ்சம் கொடுக்க முன்வந்தவர் யார் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
