அதிமுகவும் திமுகவும் சிங்கமோ, புலியோ இல்லை வெறும் கொசுக்கள்... ஈசியா நசுக்கலாம் - கமல்ஹாசன்
சென்னை: அதிமுகவும் திமுக பெரிய சிங்கம், புலி அல்ல, கொசுக்கள் மாதிரித்தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். அந்த கொசுக்களை நீங்கள் விரல்களால் ஏப்ரல் 6ஆம் தேதி நசுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தினால் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது.
தேர்தல் பிரசாரம் 4ஆம் தேதி மாலையுடன் ஒய்ந்து விடும். பிரசாரம் செய்ய நாட்கள் குறைவாக உள்ளதால் முக்கிய தலைவர்கள் பறந்து பறந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

கமல் இறுதிக்கட்ட பிரசாரம்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் காலை நேரத்தில் வாக்கிங் சென்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் சென்றும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை பேசி வாக்கு சேகரித்து வருகிறார் கமல்ஹாசன். தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த கமல் எதிர்கட்சியினரை கடுமையாக சாடினார்.

குப்பைகள் நடுவே
கலவர பூமியாக உள்ள கோவையை மத நல்லிணக்க பூமியாக மாற்ற வேண்டும் என்று கூறிய கமல், இங்குள்ள மக்களின் ஏழ்மை, கொடுமை, சாக்கடை, குப்பை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். சுத்தமில்லாத இடத்திலும் கொசுக்கடியிலும் மக்களை ஆள்பவர்கள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

மக்கள் பாதிப்பு
5 வருடத்தில் இரண்டு வாரம் மட்டுமே குத்தைகை எடுத்து, ஜூஸை உறிஞ்சிவிட்டு சக்கையை போட்டு விட்டு போய் விடுவார்கள் என்று கூறிய கமல் அதனால் தான் இங்கே மக்கள் வசிக்கும் இடங்கள் சுத்தமில்லாமல் சாக்கடைகள் ஓடுகிறது என்றும் தெரிவித்தார்.

கொசுக்களை நசுக்குங்கள்
உங்களை கொசுக்கள் கடித்து நோய் பரவ காரணமாக இருக்கிறது. அதிமுக, திமுக ஆகியவை புலி, சிங்கம் அல்ல கொசுக்கள்தான் என்பதால் விரல்களால் நசுக்க வேண்டும் என பேசினார். எதிர்கட்சியினரை கொசுவாக ஒப்பிட்டு கமல்ஹாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.