பாஜக உடன் மோதல்?.. சண்முகத்தால் வெடித்த சர்ச்சை.. வேகம் வேகமாக வந்து ஆப் செய்த ஓபிஎஸ்!
சென்னை: தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மீதும், பாஜக மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது என்றும் ஓபிஎஸ் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்,
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் அதிமுக கூட்டத்தில் பேசும் போது, பாஜக உடன் கூட்டணி வைத்த காரணத்தால் அதிமுக தோற்றுப்போனது என்று தெரிவித்தார்.

விழுப்புரம்
இது தொடர்பாக சிவி சண்முகம் பேசும் போது, "பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில், 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளன. விழுப்புரம் நகரத்தில் மட்டும் 16 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன.

சிறுபான்மை வாக்குகள்
முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது. பொதுவாகவே, கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுசென்ற காரணத்தினால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், கணக்கு சரியில்லை. கூட்டணிக் கணக்கு, சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதுபோன்று இல்லை என்றிருந்தால், இன்றைக்கு திமுக ஆட்சியில் வந்திருக்காது. அப்படியே தவறி அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சிதான் வைத்திருக்க முடியும். ஆகவே, இதில் நம்முடைய குறையும் இருக்கிறது. ஏதோ அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள், மக்கள் அவர்களுக்கு அமோகமாக ஆதரவு தந்துவிட்டார்கள் என்று நினைக்கவேண்டாம் என்றார்

பாஜக பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில், "உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு" என்று பதிவிட்டுள்ளார். இதனால் அதிமுக பாஜக இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ள நிலையில் இப்படி ஒரு மோதல் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டணி தொடரும்
இதையடுத்து சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது : "பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை" என்று கூறியுள்ளார்,












Click it and Unblock the Notifications