’மெயின்’ தலையே சொல்லிருச்சு! நாங்க அப்பவே அப்புடி.. கெத்தாகப் பேசிய ஓபிஎஸ்! கடுப்பான எடப்பாடி டீம்!
சென்னை : ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது அதிமுக உட்கட்சி விவகாரம். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்குப் பிறகு புது தெம்புடன் இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக இறுதியில் வெற்றி கனியை பறிக்கப் போவது யார் என்பது தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அந்த அளவுக்கு தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற கட்சியான அதிமுகவின் உட்கட்சி மோதல் பெரிய அளவில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஒருபுறம் எடப்பாடி பழனிச்சாமியும் மறுபடியும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவின் தலைமை பதவிக்கு திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.

அதிமுக மோதல்
ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் இடையே உரசல் நீடித்து வந்த நிலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மோதலாக வெடித்தது. அதற்குப் பிறகு பொதுக்குழு நீதிமன்றம் என பல்வேறு படிநிலைகளை கடந்து வந்து தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது மக்களவைத் தேர்தல் தொடர்பான பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

பாஜக விருப்பம்
திமுக தரப்பில் பூத் கமிட்டி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக முழுவதும் நடைபெற்றது. அதேபோல அதிமுகவும் பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டம் என களத்தில் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக ஒன்று சேர வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பிரதமரின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது .மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை எடப்பாடி ஓபிஎஸ் ஒன்றாகச் சென்று வரவேற்றனர்.

பிரதமர் மோடி
ஆனால் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்ட நிலையில் பிரதமர் மறுத்து விட்டதாகவும் ஒன்றாகவே வருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இடம் பிரதமர் பேசினார் , ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசவில்லை என எடப்பாடி பரப்பு செய்திகள் பரப்பி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அமித்ஷா சந்திப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

அமித் ஷா
இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார் ஓபிஎஸ். மேலும் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசியதை என் அருகில் இருந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியும். எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் மனவருத்தத்தில் இல்லை. மனமகிழ்ச்சியாக உள்ளனர். பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக உள்ளது" என்றார்.

ஓபிஎஸ் தரப்பு உற்சாகம்
இதனால் அவரது ஆதரவு நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை அமித் ஷா ஓ பன்னீர் செல்வத்துக்கே ஆதரவளிப்பார் எனவும் பிரதமர் மோடியும் ஓ.பன்னீர்.செல்வத்துடன் இணக்கமாகவே இருக்கிறார். இதனால் வரும் காலங்களில் ஓ பன்னீர்செல்வத்தின் கை ஓங்குவது உறுதி என சமூக வலைதளங்களில் உற்சாகமாக பேசி வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து யோசித்து வருகிறது, அதே நேரத்தில் தனித்துப் போட்டியின பாஜக தரப்பை வெறுப்பேற்றவும் மாஜி அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications