“தவெக உடனான கூட்டணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை" - எடப்பாடி மீது குற்றம்சாட்டிய சீனியர்கள்!
சென்னை: "2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக உடனான கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது" எனக் குற்றம் சாட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்தார்.

பின்னர் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியில் மீண்டும் இணைந்தனர். அவர்களை சேர்த்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பழைய பதவிகளை வழங்கவில்லை. இதனால் அவர்கள் இன்னும் அதிருப்தியிலேயே இருந்து வருகின்றனர். மேலும், 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் நீக்கினார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டங்களை மூத்த நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். அதிமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிருப்தி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இந்தச் சூழலில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "நடந்து முடித்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளராகிய நீங்கள் கழகத்தை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், இருவேறு கருத்துக்கள் காரணமாக 47 கழக சட்டமன்ற உறுப்பினர்களில், 25 கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொதுச் செயலாளர், திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவை கட்டிக்காட்டி திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், OPS ஒப்புக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசீனப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்று டிடிவி தினகரனுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்று நிராகரித்தீர்கள். 2019ல் அ.தி.மு.க தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள்.
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்து கோரிக்கைகளையும் செய்வதாக கூறிய போதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள். அது மட்டுமில்லாது உங்களுடைய இந்த தவறான முடிவால் பல கழக வேட்பாளர்கள் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு கோடிக்கனக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள்.
அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், ஒரு மாத காலம் அதை உறுதி செய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம், இப்படி தேடிவந்த பா.ஜ.க, பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள்.
அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில்
பலமுறை பிரமாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு,
கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதிய தமிழகம்
கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக
வெளியேற்றிவிட்டீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதனால், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையிலிருந்து மீண்டுவரமாட்டோமா ? என ஏங்கி வருகின்றனர்." எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், "அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதிமுகவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உண்மையான அக்கறையும், ஈடுபாடும் இருக்குமே ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மறப்போம், மன்னிப்போம் என்கிற அடிப்படையில் கழக நலன் கருதி கழகத்தினரிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படும் பொழுது அவற்றை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் 13.05.2026க்கு பிறகு கழகத்தின் பல்வேறு நிலைகளில் இன்று வளர பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், கழகத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை வழங்கி கழக பொதுச் செயலாளர், கழகத்தை வலுபடுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
