"நல்லவர்! புரட்டாசி சனிக்கிழமையில் மறைந்த தேவா! தூங்குவது போல் இருக்கும் தேனிசைத் தென்றல்!" உருக்கம்
சென்னை: தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இசையமைப்பாளர் கங்கை அமரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் சொன்னது என்னவென்றால் தேவா இறந்தது போல் தெரியவில்லை, அவர் தூங்கி கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. அது போல் புரட்டாசி சனிக்கிழமையில் இறந்த தேவா நேராக இறைவனிடம் சென்றுவிடுவார் என ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்காக அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன் கூறியிருப்பதாவது: தேவா என்னென்ன படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், எந்தெந்த ஆர்டிஸ்டுகளுக்கு இசை அமைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கங்கை அமரன்
கஷ்டப்பட்டு வளர்ந்து இந்த நிலைக்கு வந்த தேவா, அவருடன் பிறந்தவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். தேவா எனக்கு சம்பந்தி, அவருடைய பெண்ணை என் அண்ணன் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
நான் காலையில் இருந்து அழுதுவிட்டேன். ரொம்ப எமோஷனலாகிவிட்டேன். தேவா இறப்பு தாங்க முடியாத ஒரு துக்கம். 5 நாட்களுக்கு முன்பு கூட அவருடன் பேசியிருந்தேன். இப்போது பார்க்கும் போது கூட அவர் தூங்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.
சிவக்குமார்
இதுகுறித்து சிவக்குமார் கூறியிருப்பதாவது: தேவாவின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது. எளிமையானவர். சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். நடிகர் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் தேவாதான் இசையமைத்திருக்கிறார். ரஜினி, கமலுக்கு பிரமாதமாக மியூசிக் போட்டிருக்கிறார்.
ஆஸ்பிட்டலுக்கு சென்று மூக்கில் டியூப் போட்டு வயிற்றில் ஓட்டை போட்டு... என எந்த சித்திரவதையும் இல்லாமல் போய்விட்டார். உள்ளே போய் பார்த்தால் அவர் தூங்கி கொண்டிருப்பது போல் இருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.
ஒய் ஜி மகேந்திரன்
அது போல் தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஒய்ஜி மகேந்திரன் கூறியிருப்பதாவது: அண்மையில் சினிமா உலகத்தில் வல்லவர்கள் ஒவ்வொருத்தராக மறைந்து கொண்டே வருகிறார்கள். தேவாவை போன்ற நல்லவர்களையும் கடவுள் கூட்டிச் சென்றுவிட்டார் என்றால் யாரிடம் போய் முறையிடுவது? தேவாவை போல் நிறைய இசையமைப்பாளர்கள் வரலாம். ஆனால் தேவாவை போல் நல்ல மனிதரை பார்க்கவே முடியாது.
எனக்கு அவருடன் 1971ஆம் ஆண்டு முதலே பழக்கம்! எனது நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனது சாருகேசி படத்தில் கிளாசிக்கல் மியூசிக் அமைத்துக் கொடுத்தார். இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனக்கென தனிபாதையை வகுத்து உழைப்பால் முன்னுக்கு வந்தவர் தேவா. யாரை பற்றியும் குறை சொல்லாதவர். புரட்டாசி சனிக்கிழமையில் மறைந்துள்ள தேவா, நேரடியாக இறைவனின் காலடிகளை அடைவார் என தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார்
அது போல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருப்பதாவது: தேவாவுக்கு கோபம் வந்து நான் பார்த்தது இல்லை, அவருடைய சகோதரர்களுக்கு கோபம் வந்து யாராவது டெக்னீஷியனை திட்டினால் கூட தேவா சமாதானப்படுத்துவார்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு அடிக்கடி செல்வார். எனது இயக்கத்தில் வெளியான புருஷ லட்சணம் படத்திற்கு கோலவிழியம்மா பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்தார். அந்த பாடலில் மருவத்தூர் அம்மாளே என்ற வரி வரும் போது மருவத்தூர் கோயிலில் ஷூட்டிங் எடுக்க அனுமதி எல்லாம் வாங்கி கொடுத்தார். அவர் தூங்குவது போல் இருக்கிறார் என கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
