சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர் விருது”! விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு! முழு பட்டியல் இதோ!
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக முன்னாள் முதல்வர் முதல்வர் சித்தராமையாவுக்கும், பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு விருது பெறுவோரின் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் வெளியிட்டு உள்ளார்.

விசிக விருதுகள்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்," விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு முதல் மாமேதை மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட இருக்கிறது.

கார்நாடகா சித்தராமையா
சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம். திமுக தலைவர் கலைஞர், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் வெ.நாராயணசாமி, முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர்.இரா.நல்லக்கண்ணு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கர் சுடர் விருது
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக முன்னாள் முதல்வர் முதல்வர் சித்தராமையாவுக்கும், பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும், காமராசர் கதிர் தொழிலதிபர் விஜி சந்தோசத்துக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி செல்லப்பனுக்கும், காயிதேமில்லத் பிறை விருது எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரான தெக்லான் பகாவிக்கும் வழங்கப்படுகிறது.

மார்க்ஸ் மாமணி விருது
இதேபோல் செம்மொழி ஞாயிறு விருது தொல்லியல் அறிஞர் ராஜன் அவர்களுக்கும், மாமேதை மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது முதன்முறையாக மறைந்த எழுத்தாளர் ஜவஹர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications