அடடா.. எல்லைகளை தாண்டிய வரவேற்பு! விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் செயலால் பூரித்து போன சித்தராமையா!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு வந்த சித்தராமையாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பால் அவர் நெகிழ்ச்சியடைந்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தலைவர்களை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'விருதுகள் வழங்கும் விழா - 2022'க்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி விருது, காமராசர் கதிர் விருது, அயோத்திதாசர் ஆதவன் விருது, காயிதேமில்லத் பிறை விருது, செம்மொழி ஞாயிறு விருது, மார்க்ஸ் மாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளன.

யார் யாருக்கெல்லாம் விருது?
அந்த வகையில் இந்த ஆண்டு கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி( காங்கிரஸ்) தலைவருமான சித்தராமையா 'அம்பேத்கர் சுடர்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் எழுத்தாளர் எஸ்வி ராஜதுரைக்கு பெரியார் ஒளி விருதும், விஜிபி உலக தமிழ்ச் சங்க தலைவர் விஜிசந்தோசத்துக்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்பட உள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சி செல்லப்பனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவிக்கு காயிதேமில்லத் பிறை விருதும், தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா ராசனுக்கு செம்மொழி ஞாயிறு விருதும், மறைந்த எழுத்தாளர் ஜவஹருக்கு மார்க்ஸ் மாமணி விருதும் வழங்கப்பட உள்ளது.

சித்தராமையாவுக்கு வரவேற்பு
இந்நிலையில் தான் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சித்தராமையா இன்று சென்னை வந்தார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் வரவேற்றார். மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் சித்தராமையாவை வரவேற்கும் வகையில் வாழிய வாழிய வாழியவே என கோஷமிடப்பட்டது. இதில் அவர் நெகிழ்ந்து போனார்.

வரவேற்பில் நெகிழ்ந்த சித்தராமையா
இதையடுத்து சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சித்தராமையா, ‛‛சென்னை விமான நிலையத்தில் என்னை அன்புடன் வரவேற்ற தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. எல்லை கோடுகளுக்கு அப்பால் நாடு முழுவதும் எனது சித்தாந்த நிலைப்பாட்டுடன் என்னுடன் நிற்கும் மக்களே எனது அரசியல் பலம்'' என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
மேலும் சித்தராமையா சென்னை அண்ணா அறிவாலயம் சென்று தமிழ்நாட்டின் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன், திருமாவளவன் எம்பி, காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் செல்வ பெருந்தகை உள்பட பலர் உடனிருந்தனர். இதுபற்றி சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சென்னை சுற்றுப்பயணத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்'' எனக்கூறி படங்களை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications