ஸ்கெட்ச் திமுகவுக்கு தான் போட்டாரு அமித்ஷா.. ஆனா, எடப்பாடிக்கு எதிரா திரும்பிருச்சே! குஷியில் ஓபிஎஸ்
சென்னை: திமுகவுக்கு எதிராக மிக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என நினைக்கிறார் பாஜக மூத்த தலைவரான அமித்ஷா. அதிமுக அணிகள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு கட்சிகளையும் இணைத்து மெகா கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமித்ஷா ஓபிஎஸ்ஐ சந்தித்ததால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை சமாளிக்கும் வகையில் தமிழக வருகையின் போது அமித்ஷா பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்கின்றனர் பாஜகவினர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி அரசியலில் பெரிய மாற்றங்கள் உருவாகும் சூழல் உள்ளது. குறிப்பாக திமுகவுக்கு கடும் போட்டி கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக முழுமையான திட்டமிடலை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனி போட்டியிட்டது. பல்வேறு தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் சேர்த்து பெற்ற வாக்குகளை விட திமுக குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், வாக்குகள் பிரிந்ததால் திமுக வெற்றி பெற்றது.

அமித்ஷா கூட்டணி திட்டம்
இந்த நிலை மீண்டும் நிகழக்கூடாது என்ற எண்ணமே பாஜக உயர்மட்ட தலைவர்களின் எண்ணமாக உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமித் ஷா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதிமுக வாக்குகள் சிதறாமல் ஒரே குடையின் கீழ் திரண்டு வர வேண்டும் என்பதையே அவர் முதன்மை இலக்காக வைத்துள்ளார். தற்போது அதிமுகவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் பல காரணங்களால் சிதறக்கூடிய சூழ்நிலை இருப்பதாக பாஜக மதிப்பீடு செய்து வருகிறது.
ஓபிஎஸ் சந்திப்பு
இதை தடுக்கும் வகையில் முக்கிய பிரிவு மற்றும் சிறு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடப்பதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், ஓபிஎஸ்ஸை அமித் ஷா சந்தித்தது பாஜக-அதிமுக உறவில் சிக்கலையும், எடப்பாடி பழனிசாமிக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்தது குறித்து பழனிசாமி அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே, ஓபிஎஸ்-பழனிசாமி பிரச்சினைக்கு முடிவுகட்டும் திட்டத்தை அமித் ஷா வகுத்துள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
பாஜக கூட்டணி
ஓபிஎஸ் சமீபத்தில் புதிய கட்சி தொடங்கிய நிலையில், அந்தக் கட்சியையும் பாஜக கூட்டணியில் இணைக்க அமித் ஷா முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ஏற்பாடுகள் முடிந்தவுடன் ஓரிரு வாரங்களில் அமித் ஷா தமிழகம் வருவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெகா கூட்டணி அறிவிப்பு
அமித் ஷாவின் இந்த வருகை மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. அவர் தமிழகம் வரும் போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட பலரை சந்திக்கும் திட்டமும் உள்ளது. இவர்களை ஒருங்கிணைத்து திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பாஜக நோக்கமாக உள்ளது.
காங்கிரஸ்-திமுக
2026ல் திமுகவுக்கு 'டஃப்' கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாக பாஜக கருதுகிறது. விஜயின் தமிழக வெற்றி கழகமும், அதிமுக பிரிவுகளும், காங்கிரஸ்-திமுக உறவுகளில் தோன்றும் புதிய மாற்றங்களும் தமிழக அரசியலை அதிக போட்டியைக் கொண்டதாக மாற்றியுள்ளன. இதனால் 2026 தேர்தல் கூட்டணிக் கணக்குகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அமித் ஷா தமிழகம் வரும்போது, அனைத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் முடித்து, திமுகக்கு எதிரான பெரிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்கின்றனர் பாஜக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications