மாஜி அன்பில் மகேஷ் மனைவிக்கு சிக்கல்? சிக்கிய வீடியோ ஆதாரம்! அடுத்தகட்ட ஆக்ஷனுக்கு ரெடியான சிசிபி!
சென்னை: பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிரான ஆதாரங்களை சிசிபி திரட்டி வருகிறது. ஏற்கனவே அவர் முன் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு புதிய வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில், அன்பில் மகேஷ் மனைவிக்கு சிசிபி சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
பிடி அரசகுமார்
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முக்கிய ஆவணங்கள்
பிடி அரசகுமார் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அரச குமாரிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளரான வாளாடி கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான 8 இடங்களில் 20க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி பரிவர்த்தனைகள், பள்ளி அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள், மனுக்கள், ஹார்ட் டிஸ்க்கள், காசோலைகள், லேப்டாப்கள், 18 செல்போன்கள், ஒரு ஐபாட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் 8 மணி நேர சோதனையின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பினர்.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்நிலையில், மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த விசாரணையில் திடீர் திருப்பமாக அமைச்சர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனைவிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிசிபி சம்மன்?
இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 420 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கலாம் எனவும், தற்போது ஒரு புதிய வீடியோ ஆதாரமும் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. அந்த வீடியோ ஆதாரத்தில் முத்துக்குமாருக்கு 70 கோடி, அரசு குமாருக்கு 50 கோடி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் 300 கோடி ரூபாய் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. முக்கியமான ஆதாரம் சிக்கி இருக்கும் நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மனைவிக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உலாவுகின்றன.


Click it and Unblock the Notifications
