நைட்டியோடு கைதான நாதக பெண்.. MLA அருள் விக்னேஷுக்கு மட்டும் சலுகை.. உடைகிறதா கண்ணாடி பாத்திரம் தவெக
சென்னை: ஆளுங்கட்சியாக இருப்பதால் எந்த பிரச்சினையையும் மூடி மறைத்துவிடலாம் என்று நினைக்கிறார்களா? என்று மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.. ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு, சிறுமிகள் மாயமான விவகாரம், எம்எல்ஏ மீதான புகார் என அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரங்களில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் பேட்டி ஒன்றில் ராஜகம்பீரன் எழுப்பியிருக்கிறார்.
அரசியல் களம் சேனலில் பேசியிருக்கும் ராஜகம்பீரன், "கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் தந்த புகார்
ஒரு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தங்களுடைய புகார்களையும் கோரிக்கைகளையும் மனுக்களாக அளிப்பது வழக்கம். ஆனால், ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியே தனது பாதுகாப்புக்காக தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அதிகாரி ஏற்கனவே புகார் அனுப்பியதாகவும், அவரை டிரான்ஸ்பர் செய்ய முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.
எந்தத் தவறும் செய்யாத நான் ஏன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கலெக்டர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய கணவரும் தலைமை செயலாளரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
பெண்களுக்கு பாதுகாப்பு
இந்த விவகாரம் வெளியானபோது அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்தார்கள். கனிமொழி சோஷியல் மீடியாவில் இந்த விவகாரம் குறித்துப் பேசியதை வைத்து நிர்மல் குமார் விமர்சித்தார். ஆனால், உண்மையை மறைப்பதன் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. எவ்வளவு நாட்கள் மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளியே வந்துவிடும்.
பெண்களின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பேன், 234 தொகுதிகளிலும் பெண்களுக்கு உறவினராக இருப்பேன் என்று விஜய் பேசுகிறார். ஆனால், ஒரு சிறுமி காணாமல் போய் 40 நாட்களுக்கும் மேலாகியும் தீர்வு கிடைக்கவில்லை. அதற்குள் இன்னொரு சிறுமி காணாமல் போனதாகப் பிரச்சினை எழுகிறது. இந்த ஆட்சியில் நடக்கும் சம்பவங்களுக்கு யார் பொறுப்பேற்பது?
அண்ணா பல்கலைக்கழக மாணவி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார் வந்ததும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிசம்பர் 23ம் தேதி புகார் அளிக்கப்பட்டு, 25ஆம் தேதியே குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். அத்தகைய வேகத்தையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கும்போது வேகம் காட்டும் அரசு, தனது கட்சி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழும்போது ஏன் தயங்குகிறது? விவசாயிகள் போராட்டத்தில் உதயநிதி பேசியபோது அவரைக் கைது செய்ய முயற்சி செய்தார்கள். பேராசிரியர் கலையரசன் மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகாவை நைட்டியோடு கைது செய்தார்கள்.. உடை மாற்றுவதற்குக்கூட அவகாசம் அளிக்கப்படாததால், அவருடைய இரண்டு குழந்தைகளும் தவித்தன.. அப்படியிருக்கும்போது சொந்தக் கட்சி எம்எல்ஏவுக்கு மட்டும் ஏன் சலுகை?
ஆட்சிக்கு ஆபத்து
தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி நடைபெறுகிறது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தங்கள் பக்கம் கொண்டுவர முயற்சித்ததாக விமர்சனங்கள் உள்ளன. கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழந்ததால் அங்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது. இப்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏவும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.
தங்கள் கட்சியிலேயே 2 தொகுதிகள் காலியாகும் சூழல் உருவாகியிருக்கிறது.. ஆட்சிக்கு எதிராக விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.. இந்த சூழலில் இடைத்தேர்தலை சந்திப்பது தவெகவுக்குச் சவாலாக இருக்கும்..
அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது தவெகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சி பாதுகாப்பதாக மக்கள் நினைத்தால், அது ஆளுங்கட்சிக்கு அவமானமாக மாறும்.
41 எம்எல்ஏக்கள் பின்னணி
தவெக எம்எல்ஏக்களின் பின்னணி குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். 41 எம்எல்ஏக்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று அறிக்கை சொல்கிறது.. . இதையெல்லாம் விஜய் கவனிக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் ஆதரவாகப் பேசியிருப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்பதுதான் அறம் சார்ந்த அரசியல்.
விஜய் அரசியல்
குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பாதுகாப்பதன் மூலம் தவெக மீது பெண்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் உருவாகிவிடும். நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் நிலை வரும் முன்பே விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரளி விதையை விதைத்தால் அரளிதான் முளைக்கும்... தவறான அரசியல் நடவடிக்கைகளின் விளைவுகளை ஒருநாள் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
தவெக கண்ணாடிப் பாத்திரம் போன்றது. ஒருமுறை உடைந்துவிட்டால் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது. இந்த எச்சரிக்கையை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
