நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நெருக்கடியில் தமிழக அரசு! விசாரணை எப்போது? வெளியான அப்டேட்
டெல்லி: திருப்பரங்குன்றம் தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த மனுக்கள் எப்போது விசாரணைக்கு வரும்? என்பது குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.
இந்துத்துவா அமைப்புகள் கேட்கும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அப்போதைய திமுக அரசு.. வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றியது.

மட்டுமல்லாது சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தது. ஆனால், உயர்நீதிமன்றம்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவை உறுதி செய்யவே.. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், இந்த ஒருமுறை மட்டும் மனுதாரர் ராம ரவிக்குமார் கேட்ட தூணில் தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கியது.
ஆனால், இடைக்கால உத்தரவு வந்த பின்னரும் தமிழக அரசு.. திருப்பரங்குன்றம் மலை மீது 150 ஆண்டுகளாக தீபம் ஏற்றி வரும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில்தான் தீபம் ஏற்றியது.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு மனுக்கள் பட்டியலிடவில்லை. அதேபோல, இடைக்கால உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுக்கள் அனைத்தும் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மன்னிப்பு கேட்ட ஆட்சியர்
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மதுரை மாவட்ட ஆட்சியர், தீபம் ஏற்ற முடியாததற்கு மன்னிப்பு கோரியிருந்தார். தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததாகவும்.. ஆனால், தேவஸ்தானத்தை தவிர வேறு யாரையும் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஆட்சியர், தீபம் ஏற்றுவதற்கான நபர்களை தேவஸ்தானம் அங்கீகரிக்க வேண்டும் என முயன்றும், தேவஸ்தானம் அந்த அங்கீகாரத்தை வழங்காமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தீர்மானித்துவிட்டது என்று ஆட்சியர் தனது அறிக்கையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
