பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சுவர்! முட்டாள்தனமான திட்டம்! நேரிலேயே கண்டித்த அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு சுற்றுச்சுவர், நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சுற்றுச்சுவர் கட்டும் திட்டம் முட்டாள்தனமானது என்றும் அங்கிருந்த அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருக்கும் பகுதிக்கு நேரில் சென்றார் பாமக தலைவர் அன்புமணி.

Anbumani Ramadoss

அங்கு பிளாட்பார்ம், சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அவர் அதிகாரிகளிடம், "1 கி.மீ. buffer zone-ல் தடுப்பு சுவர்களை கட்ட கூடாது என என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படி பார்த்தால் நீங்கள் சுற்றுச்சுவர் அமைக்கும் இடமும் பஃப்பர் ஜோனில் தானே வருகிறது.

நீங்கள் சதுப்பு நிலத்திற்கு எல்லையை அமைக்க வேண்டும் என்றால் அங்கிருக்கும் தண்ணீர் இந்த பக்கம் வரும் வகையிலும் இங்கிருக்கும் தண்ணீர் அந்த பக்கம் வரும் வகையிலும் இரும்பு வேலி (Fence) அமைக்கலாமே, எதற்காக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.

சென்னைக்கு பாதிப்பு

மேலும் சுற்றுச்சுவர், நடைபாதை அமைக்கப்பட்டால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வெள்ள நீர் வடியாது. எனவே சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு கட்டினால் சென்னை மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் என அன்புமணி தெரிவித்தார்.

பள்ளிக்கரணை குறித்து ஏற்கெனவே பல முறை அன்புமணியும், சவுமியாவும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். அந்த வகையில் அன்புமணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதையும் அமைத்து வருகிறது.

தடுப்புச்சுவர்

தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும்.

மழைக்காலங்களில் நீரை ஈர்க்கும் பள்ளிக்கரணை

பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து விடும். இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான் திமுக அரசு அறிவித்தது. ஆனால், ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்?

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரத்து சாலை அமைத்தது. இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தின் எல்லைகள் வரையறுத்து அறிவிக்கை செய்யப்படாததைக் கண்டித்து, சதுப்பு நில எல்லை அறிவிக்கை செய்யப்படும் வரை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களைக் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இந்த உண்மைகள் தெரிந்தும் இந்த அழிவுத் திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு தொடர்வதும் ஏற்க முடியாதவை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்குள் இத்தகைய தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது 2017ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும். அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவைச் சந்திக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.

பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு

கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்கள் கட்டப்பட்டன. பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் சதுப்பு நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு, பறவைகளின் வருகை நின்று விட்டது. நெய்தல் மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த பள்ளிக்கரணைக்கும் அதே நிலை தான் ஏற்படும்.

சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான். அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக் கூடாது. இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+