தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் விவகாரம்.. தமிழக அரசு எதையோ மறைக்கிறதா? அண்ணாமலை சந்தேகம்
சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்று கேள்வி எழுவதாக அண்ணாமலை சந்தேகம் கிளப்பி உள்ளார். இதே குற்றச்சாட்டு ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்தால், இந்த அரசு, இதே பொறுமையுடன் இருக்குமா என்று கேட்டுள்ள அண்ணாமலை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்தாலும், மாவட்ட ஆட்சியர் பத்மஜா அமைதி காத்து வருகிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனால் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கொந்தளித்து வருகின்றன. இதுதொடர்பாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது.
இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அருள் விக்னேஷ் தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டு வருவதாக தவெகவினர் கூறி வருகின்றனர். இதனால் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications
