15 வருட சாம்ராஜ்யத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய அண்ணாமலை! கேசவ விநாயகம் அவுட்.. பிரஷோப குமார் இன்!
சென்னை: தமிழக பாஜக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக மாநில அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீண்டும் அரசியல் களத்தில் 'ரீ-எண்ட்ரி' ஆகும் சூழல் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவுகளாக பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

அண்ணாமலை
இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியினர் அனைவரும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதற்குள் அனைத்து அமைப்பு பணிகளும் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த முறை பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், எதிர்பார்த்ததை விட கூடுதலான தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக
அதே நேரத்தில் மூத்த தலைவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களை முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை சேத்துப்பட்டையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில், பி.எல். சந்தோஷ் தலைமையில் மற்றொரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் கட்சியில் நிலவும் உட்பிரச்சனைகள், தலைமை குறித்த குழப்பங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேசவ விநாயகம்
குறிப்பாக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகிய விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொடர் ஆலோசனைகளின் முடிவில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் அந்தப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வேறு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் பின்னணியுள்ளவர்களே பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வருவது வழக்கம் என்பதால், இந்த மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரஷோப குமார்
கேசவ விநாயகம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. அந்தப் பொறுப்புக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து மேலிடத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரஷோப குமார் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக மாற்றம்
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அண்ணாமலை மீண்டும் முக்கிய பொறுப்புடன் அரசியல் களத்தில் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், இதுவரை தேர்தல் பணிகள் எதிர்பார்த்த அளவிற்கு வேகம் பெறவில்லை என்பதில் பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 தேர்தல்
சமீபத்தில் நடைபெற்ற இந்த தொடர் ஆலோசனைக் கூட்டங்கள், தமிழக பாஜக தலைமை மீதான மேலிடத்தின் வருத்தத்தை வெளிப்படையாக காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். மொத்தத்தில், கேசவ விநாயகம் நீக்கம், ஆர்.எஸ்.எஸ் நேரடி தலையீடு, அண்ணாமலை மீண்டும் களத்தில் இறங்கும் சாத்தியம் ஆகியவை தமிழக பாஜக அரசியலில் புதிய பரபரப்புகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications