தூத்துக்குடி துப்பாக்கி சூடு! 17 போலீசார் மீது நடவடிக்கை தேவை.. அருணா ஜெகதீசன் அதிரடி அறிக்கை
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18ந் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது.

அருணா ஜெகதீசன் ஆணையம்
அதில் பல தகவல்கள் ஊடகங்களிடம் கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்க கூறப்பட்டிருந்தது.

சில பரிந்துரைகள் நிறைவேற்றம்
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 2018 மே 30 அன்று இறந்த, பிணையில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத்ராஜ் என்பவரது தாயாருக்கு, ரூ. 2 லட்சம் ரூபாய் உதவித் தொகையும், திரும்பப்பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உயர்கல்வியும் வேலை வாய்ப்பும் தொடரத் தடையில்லா சான்று வழங்கவும், அரசாணை எண்.289, பொது துறை, நாள் 26.05.2021 மூலம் ஆணை வெளியிடப்பட்டது. இதுபோன்ற சில பரிந்துரைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

போலீசார் மீது தவறு
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டனர். குண்டு வருவது தெரியாமால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். பூங்காவில் ஒளிந்து கொண்டும், வாகனங்களின் மேல் படுத்துக் கொண்டும் போலீசார் சுட்டனர். கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் இல்லை

கொடூரமான செயல்
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல். போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்
காவல் துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என்பதோடு, போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார். பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் ஆட்சியர். ஆட்சியர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.

நடவடிக்கை
வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார். ஒரு போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் சுட வைத்துள்ளனர். தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை எஸ்.பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications