டிசம்பர் 4 : 6 ஆண்டுகளாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின்படி ஜெயலலிதா நினைவு நாள் இன்றுதான்!
சென்னை : ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைப்படி டிசம்பர் 4ஆம் தேதியான இன்றுதான் ஜெயலலிதாவின் நினைவு நாள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனை குறிப்பிட்டது போல் டிசம்பர் 5ஆம் தேதி இறக்கவில்லை என்றும் டிசம்பர் 4ஆம் தேதியே அவர் இறந்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆறுமுகசாமி அறிக்கை வந்த பிறகு தற்போதும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினருமே டிசம்பர் 5ஆம் தேதியே ஜெயலலிதா நினைவு நாளை அனுசரிக்கத் திட்டமிட்டுள்ளனர். எனினும், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி இன்று ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவுநாள் டிசம்பர் 4? டிசம்பர் 5? ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையால் குழப்பத்தில் அதிமுக!
ஆறாத ரணமாம் அம்மாவின் மரணம்.. ஜெயலலிதா நினைவு தினத்தை இன்றே அனுசரித்த கே சி பழனிசாமி
ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதியே தவறு.. ஒருநாள் முன்பே மரணமடைந்துள்ளார்- ஆறுமுகசாமி ஆணையம்

இரண்டு தேதியும் வேறு வேறு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தங்களது 608 பக்க விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்படைத்தது. இதையடுத்து ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கியமான பல விஷயங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, ஜெயலலிதா இறந்த தேதியும் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதியும் வேறு வேறு என ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயலைதா இறந்தது எப்போது?
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, ஜெயலலிதா இறந்த நாள் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தியது. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்திருக்கலாம் என சாட்சியங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் முன்பே
இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி 3.50 மணிக்கு ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் திதி கொடுத்ததை அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும், டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே, மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும் இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தவர்களின் தெளிவான சாட்சியங்களாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்திரமாக பயன்படுத்தப்பட்டது
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சாட்சியத்தின்படிஜெயலலிதா மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும். ஜெயலலிதாவின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில் டிசம்பர் 4 அன்று மதியம் 3 முதல் 3.30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தை கருத்தில் கொண்டு தீபக் முதலாம் ஆண்டு நினைவை அனுசரித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி ஜெயலலிதாவின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கான காரணமாக தந்திரமாக பயன்படுத்தப்பட்டதாகவும் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 5
இந்த நிலையில் ஜெயலலிதாவின் இறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி நலத்திட்டங்களை செய்தும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியும் அனுசரிக்கும் அதிமுகவினர் இந்த ஆண்டு ஆறுமுகசாமி அறிக்கையின் காரணமாக என்று நினைவு நாளை அனுசரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. டிசம்பர் 4ஆம் தேதியா இல்லை டிசம்பர் 5ஆம் தேதியா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல டிசம்பர் 5ஆம் தேதியையே ஜெயலலிதா நினைவு நாளாக அனுசரிக்கின்றன.

டிசம்பர் 4
ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்புமே நாளை தான் நினைவு நாளை அனுசரிக்கின்றனர். மெரினா கடற்கரையில் அமைந்துள்ல ஜெயலலிதா நினைவிடத்திற்கு தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் நாளையே ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதேவேளையில், அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி டிசம்பர் 4ஆம் தேதியான இன்றே ஜெ. நினைவு நாளை அனுசரிக்கிறார்.