சென்னை மக்கள் கவனத்திற்கு! சாலைகளில் படிந்த மணலால் இடையூறா? 1913 என்ற எண்ணுக்கு டயல் பண்ணுங்க!
சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம்.
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மணல் மற்றும் தூசிகள் அதிகளவில் காணப்பட்டால், 1913 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சென்னையில் 333 இடங்களில் மணல் மற்றும் தூசிகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஸ்லிப்பாக விழுந்து விபத்தில் சிக்குவதற்கு சாலைகளில் படியும் மணல் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து செல்லும் சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.

78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர்
எனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

333 இடங்களில்
குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த
வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 கி.மீ அளவிற்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 16.2.2023 முதல் 15.3.2023 வரை இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் 333 இடங்களில் உள்ள மணல் மற்றும் தூசிகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1913 என்ற தொலைபேசி
மேலும், பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மணல் மற்றும் தூசிகள் அதிகளவில் காணப்பட்டால், மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications