பாரத் பந்த்.. தமிழ்நாட்டில் இன்று எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது? சென்னையில் நிலை என்ன?
சென்னை: நாடு தழுவிய பந்த் காரணமாக இந்தியா முழுக்க பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இன்று பந்திற்கு இடையில் 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டன.
மத்திய அரசை கண்டித்து நேற்றும் தொழிற்சங்கங்கள் மூலம் நாடு முழுக்க பந்த் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி அமைப்புகள், எல்ஐசி, ரயில்வே துறை போன்ற பொதுத்துறை அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. மொத்தம் 12 கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

கோரிக்கைகள் என்னென்ன
அதன்படி தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதார கொள்கைகளை மாற்ற வேண்டும், ஜிஎஸ்டியில் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும், தனியார்மயமாக்கலை கைவிடவேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், தொழிலாளர் கூட்டமைப்புகள், ஆளும் பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் மூலம் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு பேருந்து
வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்த போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் நேற்று போக்குவரத்து கடுமையாக முடங்கியது. சென்னையில் நேற்று 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே மாலை வர இயங்கியது. மாலை 6 மணிக்கு பின்பாகவே கூடுதலாக பேருந்துகள் இயங்கின. அதன்பின் இன்றும் பேருந்துகள் முடங்கி உள்ளன. நேற்று சென்னையை தவிர மற்ற பெரும்பாலான நகரங்களில் 60 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.

தமிழ்நாடு பந்த்
தமிழ்நாட்டில் நேற்று 33 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்கியது குறிப்பிடத்தக்கது. அதாவது தினமும் 15,335 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால் நேற்று 5023 பேருந்துகள் மட்டுமே இயங்கின. சென்னையில் 3,500 பேருந்துகள் தினமும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று 694 மட்டுமே இயங்கியது. அதுவும் குறிப்பிட்ட சில ரூட்களில் மட்டுமே இயங்கியது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பேருந்து போக்குவரத்து பந்த்
நாடு முழுக்க இரண்டாவது நாளாக பொது வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில்தான் இன்று பந்த் காரணமாக மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று அளவிற்கு இன்று மொத்தமாக பேருந்துகள் நிறுத்தப்படவில்லை. இன்று 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாநகரை பொறுத்தவரை இன்று 60 சதவீதம் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு பஸ் பேருந்து
மாணவர்கள், பொது மக்களின் தேவை கருதி பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் 3,500 பேருந்துகளில் இன்று அதிகாலை 2100 பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தமாக 9201 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பணியாளர்கள் எல்லோரும் பணிக்கு திரும்பிவிட்டதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை போக்குவரத்து
அதே சமயம் சென்னையை தவிர்த்து கோவை, தூத்துக்குடி, மதுரை திருச்சியில், அரசு பேருந்துகள் நேற்றை விட குறைவாகவே இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை பெருந்தவரை பேருந்து முடக்கம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நாடு தழுவிய போராட்டம்
மேற்கு வங்கத்தில் 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்கின. கேரளாவில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான பேருந்துகளே இயங்கியது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆளாத மாநிலங்களில் இந்த பந்த் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு. வங்கி சேவைகள் முடக்கப்பட்ட காரணத்தால் நேற்று காசோலை பரிவர்த்தனைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications