தாம்பரம் மாநகராட்சியில் பில் பாக்கி? ஓய்வு பொறியாளர்களின் வீடுகளுக்கே போய் கையெழுத்தா? பரபர சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் வேலை முடிந்துவிட்டது.. பில் போட்டு பணம் வாங்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால், அந்தப் பணிக்கான அளவீடு, கோப்பு, கையெழுத்து விஷயத்தில் இப்போது வேறு ஒரு சிக்கல் கிளம்பியிருக்கிறது. பணியிலுள்ள என்ஜினியர்களிடம் கையெழுத்து பெறுவதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற பொறியாளர்களை தேடிச் சென்று கையெழுத்து பெறுவதாக எழுந்துள்ள புகார், மாநகராட்சி நிர்வாகத்தில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் சாலை, மழைநீர் வடிகால், கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

chennai tambaram Bill Pending Retired Engineers

ஒப்பந்ததாரர்கள் ஒரு பணியை முடித்த பிறகு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர் நேரில் சென்று அந்தப் பணியை ஆய்வு செய்வது வழக்கம். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு பணி நடந்திருக்கிறதா, தேவையான தரத்தில் பணி முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்த பிறகே அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.

பில் போடுவதில் தாமதம்.. என்ன காரணம்?

இந்த நிலையில்தான் சில ஒப்பந்ததாரர்கள் தங்களது பணிகளுக்கான பில்களை முடித்து பணம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் சொல்கிறார்கள்.. இப்போது பணியிலுள்ள பொறியாளர்கள் பணிகளை ஆய்வு செய்து கையெழுத்திடுவதற்கு முன்பு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார்களாம்..

அதிலும், பணிகள் தொடர்பான ஃபைல்கள், மற்றும் அளவீடுகளுக்கு தற்போதைய பொறியாளர்களிடம் கையெழுத்து பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும், இதனால், ஏற்கனவே அந்த பணிகளை கவனித்த ஓய்வு பெற்ற பொறியாளர்களை அணுகி, பணிகள் முடிக்கப்பட்டதற்கான கையெழுத்தை பெறுவதாக சில ஒப்பந்ததாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல.. சில ஒப்பந்ததாரர்கள் ஓய்வு பெற்ற என்ஜினியர்களின் வீடுகளுக்கே சென்று கையெழுத்து பெறுவதாகவும் கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் கையெழுத்தா?

அப்படியானால் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் கையெழுத்தா? இதுதான் இப்போது முக்கிய கேள்வியாகியுள்ளது. மாநகராட்சியில் இப்போது பணியிலுள்ள பொறியாளர்கள்தானே பணிகளை நேரில் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும்? அப்படியிருக்கம்போது, ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் கையெழுத்து பெறுவது எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி.

ஓய்வு பெற்ற பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் அந்தப் பணியை உண்மையாகவே ஆய்வு செய்திருந்தால், இப்போது அவர்களிடம் இருந்து கையெழுத்து பெறுவதற்கான சட்டபூர்வ அல்லது நிர்வாக நடைமுறை என்ன என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு பணியை யார் மேற்பார்வையிட்டார்கள்? பணி எப்போது முடிக்கப்பட்டது? அதன் அளவீடுகளை யார் பதிவு செய்தார்கள்? அந்த பணிக்கான இறுதி சான்றிதழை வழங்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது? இவை அனைத்தும் மாநகராட்சி ஆவணங்களில் தெளிவாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏற்கனவே சலசலத்த டெண்டர் விவகாரம்

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில்கூட, சுமார் ரூ.45.9 லட்சம் மதிப்பிலான 2 அழகுபடுத்தும் பணிகள், அவற்றுக்கான டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பே முடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் "நடைமுறைத் தவறு" என விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆர். சரண்யாவுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்..

அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன

இப்படிப்பட்ட சூழலில், தாம்பரம் மாநகராட்சியில் மீண்டும் எழுந்துள்ள கையெழுத்து தொடர்பான புகாரும் கவனத்தை பெற்றுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் கவனித்து வரும் நிலையில், இந்தப் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் இதுதான்:

"தற்போது நிலுவையில் உள்ள அனைத்து ஒப்பந்தப் பணிகளின் பட்டியலை தயாரித்து, ஒவ்வொரு பணியையும் தற்போதைய பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பணியின் அளவு, தரம், ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் உண்மை நிலையை சரிபார்த்த பிறகே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற பொறியாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படும் பணிகளின் கோப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் கையெழுத்துகள் எந்த அடிப்படையில் பெறப்பட்டன, சம்பந்தப்பட்ட ஓய்வு பெற்ற பொறியாளர்கள் அந்தக் காலத்தில் பணிகளை ஆய்வு செய்தார்களா, தற்போது அவர்களுக்கு கையெழுத்திட அதிகாரம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

நேரில் ஆய்வு - சான்று

தற்போதைய பொறியாளர்கள் பணிகளை நேரில் ஆய்வு செய்து சான்றளிப்பதற்கான வெளிப்படையான நடைமுறையை உருவாக்க வேண்டும். அதேபோல், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் அல்லது வேறு தனிப்பட்ட பலன்கள் கோரப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

டெண்டர் முதல் பணி நிறைவு, அளவீடு, தர ஆய்வு, சான்றிதழ், கையெழுத்து, பணம் வழங்குதல் வரை ஒவ்வொரு கட்டத்திலும் யார் பொறுப்பு என்பது மாநகராட்சி ஆவணங்களில் தெளிவாக இருக்க வேண்டும்" என்றெல்லாம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+